வேலூர் புதிய பஸ் நிலையத்தில் இருந்துபெங்களூரு, திருப்பதி, சேலத்துக்கு பஸ்கள் இயக்கம்
வேலூர் புதிய பஸ் நிலையத்தில் இருந்து பெங்களூரு, திருப்பதி, சேலம் உள்ளிட்ட பகுதிகளுக்கு பஸ்கள் இயக்கப்பட்டன. பஸ் நிலையத்தில் கடைகள் இல்லாததால் பயணிகள் அவதிக்கு உள்ளாகினர்.
வேலூர் புதிய பஸ் நிலையத்தில் இருந்து பெங்களூரு, திருப்பதி, சேலம் உள்ளிட்ட பகுதிகளுக்கு நேற்று முதல் பஸ்கள் இயக்கப்பட்டன. பஸ் நிலையத்தில் கடைகள் இல்லாததால் பயணிகள் அவதிக்கு உள்ளாகினர்.
பஸ்கள் இயக்கம்
வேலூர் புதிய பஸ்நிலையம் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ.53 கோடியே 13 லட்சத்தில் கட்டப்பட்டது. இதனை தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த ஜூன் மாதம் திறந்து வைத்தார். பஸ்நிலைய பணிகள் முழுமை அடையாததால் அங்கிருந்து சென்னை, காஞ்சீபுரம், திருத்தணி, அரக்கோணம் மார்க்கமாக செல்லும் பஸ்கள் மட்டும் இயக்கப்பட்டு வந்தன. மற்ற மார்க்கமாக செல்லும் அனைத்து பஸ்களும் வேலூர் பழைய பஸ்நிலையம், மக்கான் ஆடுதொட்டி தற்காலிக பஸ்நிலையத்தில் இருந்து இயக்கப்பட்டன.
இதனால் பயணிகள் சிரமத்துக்கு உள்ளாகினர். குறிப்பாக வெளியூரில் இருந்து வேலூர் வழியாக பிற பகுதிகளுக்கு பயணம் செய்தவர்கள் எந்த பஸ்நிலையத்திற்கு சென்று பஸ் ஏறுவது என்று குழப்பம் அடைந்தனர். எனவே புதிய பஸ்நிலைய பணிகளை விரைந்து முடிந்து அங்கிருந்து பஸ்களை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்தனர்.
கடைகள் இல்லாததால் பயணிகள் அவதி
இந்த நிலையில் வேலூர் புதிய பஸ்நிலையத்தில் இருந்து அதிகாலை முதல் குடியாத்தம், பேரணாம்பட்டு, கே.ஜி.எப்., திருப்பத்தூர், சேலம், தர்மபுரி, ஓசூர், பெங்களூரு, சித்தூர், திருப்பதி ஆகிய மார்க்கமாக செல்லும் பஸ்கள் இயக்கப்பட்டன. அதனால் வழக்கத்தைவிட பஸ் நிலையத்தில் பயணிகள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. பஸ் நிலையத்தில் கட்டப்பட்டுள்ள கடைகள் பொதுஏலம் விடாததால் இதுவரை திறக்கப்படவில்லை.
அதனால் டீ, காபி, பிஸ்கெட், தண்ணீர் பாட்டில், உணவு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வெளியே சென்று தேடி அலைந்து வாங்கும் நிலை காணப்பட்டது. அதனால் பயணிகள் கடும் அவதிக்கு உள்ளாகினர். குழந்தைகள், முதியவர்களின் நலனை கருத்தில் கொண்டு கடைகளை உடனடியாக திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
போக்குவரத்து நெரிசல்
புதிய பஸ்நிலையத்தில் இருந்து நேற்று குடியாத்தம், பேரணாம்பட்டு, கே.ஜி.எப்., திருப்பத்தூர், சேலம், தர்மபுரி, ஓசூர், பெங்களூரு, சித்தூர், திருப்பதி பகுதிகளுக்கும் பஸ்கள் இயக்கப்பட்டதால் பஸ்நிலையம் அருகே உள்ள கிரீன் சர்க்கிள் பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு பாலாற்று பாலத்தை தாண்டி விருதம் பட்டு வரை வாகனங்கள் வரிசை கட்டி நின்றன.
வேலூர் மக்கான் ஆடுதொட்டி தற்காலிக பஸ் நிலையத்தில் இருந்து ஆரணி, திருவண்ணாமலை மார்க்கமாக இயக்கப்பட்டு வந்த பஸ்கள் நேற்று காலை முதல் வேலூர் பழைய பஸ் நிலையத்தில் இருந்து இயக்கப்பட்டன.