பள்ளி நேரங்களில் பஸ்கள் இயக்க வேண்டும்
வடபாதிமங்கலம் - மன்னார்குடி இடையே பள்ளி நேரங்களில் பஸ்கள் இயக்க வேண்டும் மாணவர்கள் கோரிக்கை
கூத்தாநல்லூர்:
கூத்தாநல்லூர் அருகே வடபாதிமங்கலம் பகுதியில் உள்ள வடபாதிமங்கலம், உச்சுவாடி, கிளியனூர், சோலாட்சி, மாயனூர், பூசங்குடி, புனவாசல், ஓகைப்பேரையூர், மன்னஞ்சி, பெரியகொத்தூர், குலமாணிக்கம், அன்னுகுடி, ராமநாதபுரம், அரிச்சந்திரபுரம் மற்றும் அதனை சுற்றியுள்ள 30 க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் கூத்தாநல்லூர் மற்றும் மன்னார்குடி பகுதிகளில் உள்ள பள்ளி, கல்லூரிகளில் படித்து வருகின்றனர். இந்த நிலையில், வடபாதிமங்கலத்தில் இருந்து மன்னார்குடிக்கு இரண்டு அரசு பஸ்கள் இயக்கப்படுகின்றன. ஆனால் இந்த பஸ்கள் மாணவர்கள் பள்ளிக்கு செல்லும் வகையில் உரிய நேரத்தில் இயக்கப்படுவது இல்லை என மாணவர்கள் தெரிவிக்கின்றனர். குறிப்பாக, காலை 7.50 மணியில் இருந்து 9 மணி வரை பஸ்கள் கிடையாது. அதன்பிறகு, 9.10க்கு அரசு பஸ் இயக்கப்படுகிறது.இதனால் பள்ளி, கல்லுரிகளுக்கு உரிய நேரத்திற்கு செல்ல முடியாமல் மாணவர்கள் சிரமமடைகின்றனர். அதனால், மாணவர்கள் நலன் கருதி, தினமும் காலை 8.20 மணிக்கு வடபாதிமங்கலத்தில் இருந்து புறப்பட்டு, மன்னார்குடி சென்றடையும் வகையில் அரசு பஸ் இயக்க வேண்டும் என்று அப்பகுதி மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.