சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட 6 மாவட்டங்களில் இன்று இரவு பஸ் ஓடாது
மாண்டஸ் புயல் இன்று கரையை கடக்க உள்ள நிலையில் சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட 6 மாவட்டங்களில் இன்று இரவு பஸ் ஓடாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை,
தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில் 'மாண்டஸ்' புயல் சின்னம் உருவாகியுள்ளது. இதன் காரணமாக கனமழை முதல் அதி கனமழை எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. பல மாவட்டங்களில் தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள ஏற்கனவே அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன.
அதன் அடிப்படையில் புயல் வீசக்கூடிய மாவட்டங்களில் இதுகுறித்த நடவடிக்கைகளை அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில் பல்வேறு துறைகளின் தயார் நிலை குறித்து தமிழக அரசின் தலைமைச் செயலாளர் இறையன்பு தலைமையில் ஒருங்கிணைந்த ஆய்வுக் கூட்டம் நேற்று தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது.
மாண்டஸ் புயல் எச்சரிக்கையை தொடர்ந்து சென்னையில் தலைமைச் செயலாளர் இறையன்பு தலைமையில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் பல்வேறு அறிவுரைகள் வழங்கப்பட்டன.
அதன்படி, அனைத்து அரசு அதிகாரிகளும் தலைமையகத்தில் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர். சென்னை, செங்கல்பட்டு, காஞ்சீபுரம், திருவள்ளூர், கடலூர், விழுப்புரம் ஆகிய 6 மாவட்டங்களில் புயல் வீசும் நாளில் (இன்று) இரவு பஸ் சேவை அளிக்க கூடாது என்றும் பஸ் நிலையங்களில் கூட்டமாக மக்கள் நிற்கக்கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.