நெகிழி பயன்பாடு இல்லாத மாவட்டமாக உருவாக வணிகர்கள் ஒத்துழைக்க வேண்டும்


நெகிழி பயன்பாடு இல்லாத மாவட்டமாக உருவாக வணிகர்கள் ஒத்துழைக்க வேண்டும்
x
தினத்தந்தி 12 March 2023 12:30 AM IST (Updated: 12 March 2023 12:30 AM IST)
t-max-icont-min-icon

தஞ்சை மாநகராட்சியில் வணிகர்களுக்கான பயிற்சி பட்டறையில், நெகிழி பயன்பாடு இல்லாத மாவட்டமாக தஞ்சை உருவாக வணிகர்கள் ஒத்துழைக்க வேண்டும் என்று கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வேண்டுகோள் விடுத்தார்.

தஞ்சாவூர்

தஞ்சை மாநகராட்சியில் வணிகர்களுக்கான பயிற்சி பட்டறையில், நெகிழி பயன்பாடு இல்லாத மாவட்டமாக தஞ்சை உருவாக வணிகர்கள் ஒத்துழைக்க வேண்டும் என்று கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வேண்டுகோள் விடுத்தார்.

பயிற்சி பட்டறை

தஞ்சை மாவட்ட நிர்வாகம், தஞ்சை மாநகராட்சி, தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் கவின்மிகு தஞ்சை இயக்கம் சார்பில் நெகிழி மாசில்லா தஞ்சை மாவட்டம் என்ற தலைப்பில் வணிகர்ளுக்கான பயிற்சி பட்டறையை தஞ்சையில் நேற்று நடத்தியது.

இந்த பயிற்சி பட்டறைக்கு கலெக்டர் தினேஷ்பொன்ராஜ் ஆலிவர் தலைமை தாங்கினார். மாநகராட்சி ஆணையர் சரவணகுமார், மாநகர் நல அலுவலர் சுபாஷ்காந்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாசு கட்டுப்பாட்டு வாரிய உதவி பொறியாளர் விஜயபிரியா வரவேற்றார். இதில் திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரி துணை முதல்வர் அழகப்பா மோசஸ், கவின்மிகு தஞ்சை இயக்க செயலாளர் பர்வீன்சுல்தானா ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.

அபராதம் விதிப்பது நோக்கமல்ல

கூட்டத்தில் கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் பேசுகையில், நெகிழி பயன்பாட்டை குறைக்க முடியவில்லை என்பது ஒரு சவால் நிறைந்தது. தஞ்சை மாவட்டம் வேளாண்மை நிறைந்த மண். இந்த மண்ணை மாசுபட நாம் அனுமதிக்கலாமா?. தஞ்சை மாவட்டத்தில் நெகிழி பயன்பாடு இல்லை என்ற நிலையை உருவாக்க வேண்டும்.

நெகிழி விற்பனை செய்தால் ரூ.100 முதல் ரூ.25 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படும். தொடர்ந்து விற்பனை செய்தால் அபராதம் ஆயிரக்கணக்கில் அதிகரிக்கும். அபராம் விதிப்பது எங்கள் நோக்கம் அல்ல. முழுமையாக நெகிழி பயன்பாடு இல்லாத நிலையை உருவாக்க வேண்டும். அதற்கு வியாபாரிகள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

தாய்சேய் நல கண்காணிப்பு மையம்

இதில் தஞ்சை மாநகரில் உள்ள வணிகர் சங்கங்களின் நிர்வாகிகள், வியாபாரிகள், வணிக நிறுவனங்களின் உரிமையாளர்கள், உற்பத்தி நிறுவனங்களை சேர்ந்தவர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

பின்னர் கலெக்டர், தஞ்சை மாநகராட்சி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள தாய்சேய் நல கண்காணிப்பு மையத்தை பார்வையிட்டு அதன் செயல்பாடுகள் குறித்து கேட்டறிந்தார்.


Next Story