வணிக வரித்துறை அலுவலகத்தை வணிகர் சங்கத்தினர் முற்றுகை
டெஸ்ட் பர்சேஸ் நடைமுறை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தக்கோரி வணிக வரித்துறை அலுவலகத்தை வணிகர் சங்கத்தினர் முற்றுகை
விழுப்புரம்
விழுப்புரம் வணிக வரித்துறையின் மாவட்ட இணை ஆணையர் அலுவலகத்தை நேற்று தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு நிர்வாகிகள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். அதன் பின்னர் மாவட்ட தலைவர் ராமகிருஷ்ணன் தலைமையில் வணிகர் சங்கத்தினர், மாவட்ட இணைப்பதிவாளர் அலுவலகத்தில் ஒரு மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-
வணிகவரித்துறையினரால் கடந்த மார்ச் மாதம் சில்லரைக்கடைகளில் ஆய்வு செய்வது, டெஸ்ட் பர்சேஸ் செய்வது சம்பந்தமாக அறிவிப்புகள் வெளியானபோதே தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தனது கருத்துகளையும், எதிர்ப்பையும் செய்திருந்தது. மீண்டும் டெஸ்ட் பர்சேஸ் குறித்து வணிகவரித்துறையின் அறிவிப்பு கடந்த செப்டம்பர் 6-ந் தேதி வெளியிடப்பட்டது. அதன் அடிப்படையில் வணிக வரித்துறையினர் கடைகளுக்குள் வந்து டெஸ்ட் பர்சேஸ் என பொருட்களை வாங்கி அதற்கு உரிய ரசீது இல்லை எனக்கூறி அபராதம் விதிக்கின்றனர். அதுபோலவே சாலைகளில் ஆங்காங்கே நின்றுகொண்டு, சரக்கு வாகனங்களை நிறுத்தி அபராதம் விதிக்கின்றனர். அனைத்து வணிகர்களும் தங்களுக்கு தேவையான பொருட்கள் வாங்கும்போது, அதற்குரிய வரியை செலுத்தியே பொருட்களை வாங்கி வந்து விற்பனை செய்கின்றனர். ஆனாலும் வணிகவரித்துறையினர் சில்லரைக்கடைகளில் டெஸ்ட் பர்சேஸ் என வாங்கி, அதற்கு ரசீது அளிக்கப்படவில்லை எனக்கூறி அபராதம் விதிக்கும் முறை ஏற்புடையதல்ல. இந்த டெஸ்ட் பர்சேஸ் குறித்த நடைமுறையை குறைந்தது 6 மாத காலம் தொடர் விழிப்புணர்வை அனைத்து வணிகர்களுக்கும் அளித்த பிறகே ஆண்டுக்கு ரூ.5 கோடிக்கு மேல் விற்று வரவு வைக்கின்ற வணிகர்களிடம் மட்டும் மேற்கொள்ள வேண்டும். சிறு, குறு வணிகர்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று அம்மனுவில் கூறியிருந்தனர்.