உப்புக்கோட்டையில் பரபரப்பு:ஆக்கிரமிப்பை அகற்ற எதிர்ப்பு தெரிவித்துபொதுமக்கள் போராட்டம்


உப்புக்கோட்டையில் பரபரப்பு:ஆக்கிரமிப்பை அகற்ற எதிர்ப்பு தெரிவித்துபொதுமக்கள் போராட்டம்
x
தினத்தந்தி 28 Feb 2023 12:15 AM IST (Updated: 28 Feb 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

உப்புக்கோட்டையில் ஆக்கிரமிப்பை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தேனி

ஆக்கிரமிப்பை அகற்ற எதிர்ப்பு

தேனி அருகே உள்ள உப்புக்கோட்டையில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்கு கடந்த 200 ஆண்டுகளுக்கு முன்பு சமுதாயக்கூடம் மற்றும் விநாயகர் கோவிலும் கட்டப்பட்டது. மேலும் மாலை நேரத்தில் இங்கு மாணவர்களுக்கு இலவசமாக கல்வி கற்று கொடுக்கப்படுகிறது. இந்நிலையில் இந்த சமுதாயக்கூடம் தனிநபர் இடத்தை ஆக்கிரமிப்பு செய்து கட்டப்பட்டுள்ளதாக கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த கோர்ட்டு ஆக்கிரமிப்பை அகற்றும்படி உத்தரவிட்டது.

அதன்பேரில், கடந்த மாதம் 30-ந்தேதி போலீசார் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் ஆக்கிரமிப்பை அகற்றுவதற்காக பொக்லைன் எந்திரத்துடன் அங்கு வந்தனர். அப்போது ஆக்கிரமிப்பை அகற்ற பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து சமுதாயக்கூடத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் அங்கு உணவு சமைத்தும் போராட்டம் நடத்தினர். இதனை தொடர்ந்து சமுதாய கூடம் இடிக்கும் பணி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது.

பொதுமக்கள் போராட்டம்

இந்நிலையில் நேற்று மீண்டும் சமுதாயக்கூடத்தை இடிப்பதற்காக அளவீடு பணிகள் நடந்தது. அப்போது பொதுமக்களுக்கும், நில அளவையர்களுக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டது. இதையடுத்து போலீஸ் சூப்பிரண்டு பார்த்திபன் தலைமையிலான போலீசார், போடி தாசில்தார் ஜலால் மற்றும் வருவாய் ஆய்வாளர் சரவணன், கிராம நிர்வாக அலுவலர் வெங்கடேஸ்வரன், முதன்மை நில அளவையாளர் கோபி நாராயணன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்தனர்.

பின்னர் அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதைத்தொடர்ந்து ஆக்கிரமிப்பை அகற்றும் பணி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. மேலும் அசம்பாவிதம் ஏற்படாமல் இருப்பதற்காக பாதுகாப்பு பணிக்காக போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.


Related Tags :
Next Story