பவானி அருகே பரபரப்புசர்க்கரை ஆலைக்கு கரும்பு ஏற்றி வந்த லாரிகளை சிறைபிடித்து கல்வீசி தாக்குதல்;தப்பி ஓடிய மர்மநபர்களுக்கு வலைவீச்சு


பவானி அருகே பரபரப்புசர்க்கரை ஆலைக்கு கரும்பு ஏற்றி வந்த லாரிகளை சிறைபிடித்து கல்வீசி தாக்குதல்;தப்பி ஓடிய மர்மநபர்களுக்கு வலைவீச்சு
x

பவானி அருகே சர்க்கரை ஆலைக்கு கரும்பு ஏற்றி வந்த லாரிகளை மர்மநபர்கள் சிறைபிடித்தனர். மேலும் லாரிகள் மீது கல்வீசிவிட்டு தப்பி ஓடிய மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

ஈரோடு

பவானி

பவானி அருகே சர்க்கரை ஆலைக்கு கரும்பு ஏற்றி வந்த லாரிகளை மர்மநபர்கள் சிறைபிடித்தனர். மேலும் லாரிகள் மீது கல்வீசிவிட்டு தப்பி ஓடிய மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

வேலைநிறுத்தம்

ஈரோடு மாவட்டம் பவானி அருகே உள்ள ஆப்பக்கூடல் பகுதியில் இயங்கி வரும் தனியார் சர்க்கரை ஆலை நிர்வாகத்தில் 300-க்கும் மேற்பட்ட லாரிகள் ஒப்பந்த அடிப்படையில் இயங்கி வருகின்றன. இந்த நிலையில் டீசல் விலை ஏற்றம் காரணமாக கிலோமீட்டர் ஒன்றுக்கு 2 ரூபாய் உயர்த்தி தர வேண்டு்ம் என்று லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் கடந்த சில மாதங்களாக ஆலை நிர்வாகத்துக்கு கோரிக்கை வைத்து வருகின்றனர்.

தொடர்ந்து சங்கத்தின் சார்பில் கூலி உயர்வு கேட்டு பல்வேறு போராட்டங்களை நடத்தினர். ஆனால் ஆலை நிர்வாகம் பேச்சுவார்த்தை நடத்த முன் வராததால் லாரி உரிமையாளர்கள் சங்கத்தில் நேற்று முதல் கால வரையற்ற வேலை நிறுத்தம் செய்வதாக லாரி உரிமையாளர்கள் சங்கம் அறிவித்து இருந்தது. அதன்படி ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த லாரி உரிமையாளர்கள் ஆப்பக்கூடல் தனியார் சர்க்கரை ஆலைக்கு லாரிகளில் கரும்புகளை ஏற்றி செல்லாமல் நேற்று வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

சிறைபிடிப்பு-கல்வீச்சு

இந்த நிலையில் லாரி உரிமையாளர்கள் சங்கத்தின் சார்பில் நடைபெற்ற வேலை நிறுத்த போராட்டம் குறித்து தெரியாமல் சேலம் மாவட்டம் ஆத்தூர், கள்ளக்குறிச்சி ஆகிய பகுதிகளை சேர்ந்த கரும்பு உற்பத்தியாளர்கள் 11 லாரிகளில் கரும்பு பாரத்தை ஏற்றிக்கொண்டு நேற்று இரவு 8.30 மணி அளவில் பவானியை அடுத்த ஜம்பை பகுதிக்கு வந்து கொண்டிருந்தனர்.

ஜம்பை கழுங்கு ஏரி அருகே சென்றபோது அங்கு வந்த மர்ம நபர்கள் சிலர் கள்ளக்குறிச்சியில் இருந்து வந்த லாரிகளை தடுத்து நிறுத்தி சிறை பிடித்தனர். பின்னர் லாரிகள் மீது கல் வீசி தாக்குதலில் ஈடுபட்டனர். இந்த தாக்குதலில் கள்ளக்குறிச்சி பகுதியை சேர்ந்த சேட்டு, அருண்குமார், சின்னசாமி ஆகியோர் ஓட்டி வந்த 3 லாரிகளின் முன்பக்க கண்ணாடிகள் உடைந்து நொறுங்கின.

வலைவீச்சு

இதுபற்றிய தகவல் அறிந்ததும் பவானி போலீஸ் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். போலீசார் வருவதை அறிந்ததும் மர்மநபர்கள் அங்கிருந்து தப்பி ஓடினர். பின்னர் சிறைபிடிக்கப்பட்ட லாரிகளை மீட்டு பாதுகாப்புடன் ஆப்பக்கூடலில் உள்ள தனியார் சர்க்கரை ஆலைக்கு போலீசார் கொண்டு சென்றனர். இந்த சம்பவம் தொடர்பாக லாரி டிரைவர்கள் பவானி போலீசில் புகார் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். இதையாட்டி ஆலையில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.

ஜம்பையில் கரும்பு பாரம் ஏற்றி வந்த லாரிகளை மர்மநபர்கள் சிறைபிடித்து கல்வீசி தாக்கிய சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


Next Story