கோபி அருகே பரபரப்பு டாஸ்மாக் கடையை முற்றுகையிட்டு பெண்கள் போராட்டம்;
கோபி அருகே டாஸ்மாக் கடையை முற்றுகையிட்டு பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கடத்தூர்
கோபி அருகே டாஸ்மாக் கடையை முற்றுகையிட்டு பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
முற்றுகை
கோபி அருகே உள்ள அயலூர் வெள்ளப்பாறை மேடு பகுதியில் டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது. அந்த பகுதியில் 400-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள். அவர்கள் அனைவரும் கூலித்தொழிலாளர்களே.
இந்த நிலையில் அந்த பகுதியை சேர்ந்த பெண்கள் ஒன்று திரண்டு நேற்று டாஸ்மாக் கடை இருந்த பகுதிக்கு வந்தனர். பின்னர் கடையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பேச்சுவார்த்தை
இதுபற்றி அறிந்ததும் சிறுவலூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
அப்போது போலீசாரிடம் பெண்கள் கூறுகையில், 'நாங்கள் அனைவரும் கூலித்ெதாழிலாளர்கள். இங்குள்ள ஆண்களில் பெரும்பாலானோர் மதுவுக்கு அடிமையாகி நாள்தோறும் கிடைக்கும் கூலியை மது குடித்து செலவு செய்கிறார்கள். இதனால் நாங்கள் குடும்பம் நடத்தவே முடியாத நிலை உள்ளது. இங்குள்ள பெண்கள் கூலிவேலைக்கு சென்ற பின்னர், சிறுவர்கள் முதல் கல்லூரி மாணவர்கள் வரை மதுவுக்கு அடிமையாகி பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லாமல் இருந்து வருகிறார்கள். எனவே இங்குள்ள டாஸ்மாக் கடையை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.
பரபரப்பு
அதற்கு போலீசார் பதில் அளிக்கையில், 'இதுபற்றி உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும்,' என்றனர். இதில் சமாதானம் அடைந்த பெண்கள் தங்களுடைய போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். மேலும் டாஸ்மாக் கடைக்கு சென்ற போலீசார், அங்கிருந்த விற்பனையாளர்களிடம் பள்ளிக்கூடம் மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு மது விற்பனை செய்யக்கூடாது என அறிவுறுத்தினர்.
இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.