தாளவாடி அருகே பரபரப்புகாதல் திருமணம் செய்த தொழிலாளி வெட்டி கொல்ல முயற்சி;மாமனார், மாமியார் உள்பட 3 பேருக்கு வலைவீச்சு
தாளவாடி அருகே மகளை காதல் திருமணம் செய்த ஆத்திரத்தில் தொழிலாளியை அரிவாளால் வெட்டி கொல்ல முயன்ற மாமனார், மாமியார் உள்பட 3 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
தாளவாடி
தாளவாடி அருகே மகளை காதல் திருமணம் செய்த ஆத்திரத்தில் தொழிலாளியை அரிவாளால் வெட்டி கொல்ல முயன்ற மாமனார், மாமியார் உள்பட 3 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
காதலுக்கு எதிர்ப்பு
ஈரோடு மாவட்டம் தாளவாடி அருகே திகனாரை கிராமத்தைச்சேர்ந்தவர் ராமகிருஷ்ணன். இவருடைய மனைவி விஜயலட்சுமி. இவர்களுடைய மகன் விக்னேஷ் கார்த்திக் (வயது 29). இவர் கேரளாவில் கூலி வேலை செய்து வருகிறார்.
இதேபோல் அந்த பகுதியை சேர்ந்தவர் பால்ராஜ். இவருடைய மனைவி துளசியம்மா. இவர்களுடைய மகள் ஜோதி.
விக்னேஷ் கார்த்திக்கும், ஜோதியும் கடந்த 3 ஆண்டுகளாக காதலித்து வந்து உள்ளனர். இவர்களுடைய காதலுக்கு ஜோதியின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது.
திருமணம்
இந்த நிலையில் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு விக்னேஷ் கார்த்திக்கும், ஜோதியும் ஒரு கோவிலில் திருமணம் செய்து கொண்டனர். இதைத்தொடர்ந்து விக்னேஷ் கார்த்திக்கின் வீட்டுக்கு ஜோதி சென்றார். அங்கு 2 பேரும் குடும்பம் நடத்தி வந்தனர்.
இதனிடையே கடந்த மாதம் கேரளாவுக்கு விக்னேஷ் கார்த்திக் வேலைக்கு சென்றுவிட்டார். பின்னர் நேற்று முன்தினம் மாலை மீண்டும் அவர் திகனாரையில் உள்ள தனது வீட்டுக்கு வந்து உள்ளார்.
அரிவாள் வெட்டு
இதையடுத்து இரவு வீட்டில் தன்னுடைய மனைவி ஜோதி, மற்றும் தந்தை, தாயுடன் விக்னேஷ் கார்த்திக்கு பேசிக்கொண்டிருந்தார். அப்போது விக்னேஷ் கார்த்திக்கின் வீட்டுக்குள் அவருடைய மாமனார் பால்ராஜ், மாமியார் துளசியம்மா மற்றும் 16 வயது சிறுவன் ஆகியோர் திடீரென்று புகுந்தனர். உள்ளே நுழைந்ததும் துளசியம்மா தான் கொண்டு வந்த மிளகாய் பொடியை விக்னேஷ் கார்த்திக்கின் முகத்தில் தூவினார்.
பின்னர் பால்ராஜ், அரிவாளால் விக்னேஷ் கார்த்திக்கை சரமாரியாக வெட்டினார். பால்ராஜ் வெட்டியதில் விக்னேஷ் கார்த்திக்குக்கு கை, கால், வயிற்று பகுதியில் அரிவாள் வெட்டு விழுந்தது. இதை கண்டதும் வீட்டில் இருந்தவர்கள் சத்தம் போட்டு அலறினர். உடனே பால்ராஜ், துளசியம்மா மற்றும் 16 வயது சிறுவன் ஆகியோர் அங்கிருந்து தப்பி ஓடினர்.
வலைவீச்சு
படுகாயம் அடைந்து ரத்தவெள்ளத்தில் கீழே விழுந்த விக்னேஷ் கார்த்திக்கை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக தாளவாடி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக கர்நாடக மாநிலம் சாம்ராஜ் நகர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து அவர் அங்கிருந்து மைசூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.
இதுகுறித்து தாளவாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து மருமகனை அரிவாளால் வெட்டி கொல்ல முயன்ற பால்ராஜ், துளசியம்மா, 16 வயது சிறுவன் ஆகியோரை வலைவீசி தேடி வருகின்றனர்.
இந்த சம்பவம் தாளவாடி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.