தேனி அருகே பரபரப்பு:எலக்ட்ரீசியன் கத்தியால் குத்திக்கொலை
தேனி அருகே எலக்ட்ரீசியன் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டார். காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கத்திக்குத்து
தேனி அருகே உள்ள டொம்புச்சேரி கிராமத்தை சேர்ந்த கருப்பையா மகன் ராஜா (வயது 36). எலக்ட்ரீசியன். இவருடைய மனைவி இலக்கியா. நேற்று மாலை ராஜா தனது வீட்டுக்கு அருகில் நின்று கொண்டு இருந்தார். அப்போது அங்கு 2 வாலிபர்கள் வந்தனர். அவர்கள் திடீரென ராஜாவிடம் தகராறு செய்ததாக கூறப்படுகிறது.
அப்போது ஒரு வாலிபர் தான் மறைத்து வைத்து இருந்த கத்தியால் ராஜாவை சரமாரியாக குத்தினார். அதில், ராஜா ரத்த வெள்ளத்தில் கீழே சரிந்தார். பின்னர் அந்த வாலிபர்கள் 2 பேரும் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ராஜாவை மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
எலக்ட்ரீசியன் சாவு
ஆனால் செல்லும் வழியில் அவர் பரிதாபமாக இறந்தார். பின்னர் அவருடைய உடல் பிரேத பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்ததும் பழனிசெட்டிபட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேஷ் தலைமையிலான போலீசார் டொம்புச்சேரிக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.
விசாரணையில், ராஜாவிடம் தகராறு செய்து கொலை செய்ததாக கூறப்படும் 2 வாலிபர்களும், அவருடைய உறவினர்கள் என்று தெரியவந்தது. தலைமறைவாக உள்ள அந்த 2 பேரையும் பிடிக்க இன்ஸ்பெக்டர் ராஜேஷ் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. மேலும், கொலைக்கான காரணம் குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.