டி.என்.பாளையம் அருகே பரபரப்புமண் கடத்திய 3 லாரிகளை சிறைபிடித்த பொதுமக்கள்


டி.என்.பாளையம் அருகே பரபரப்புமண் கடத்திய 3 லாரிகளை சிறைபிடித்த பொதுமக்கள்
x

டி.என்.பாளையம் அருகே மண் கடத்திய 3 லாரிகளை பொதுமக்கள் சிறைபிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

ஈரோடு

டி.என்.பாளையம் அருகே மண் கடத்திய 3 லாரிகளை பொதுமக்கள் சிறைபிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

மண் கடத்தல்

ஈரோடு மாவட்டம் டி.என்.பாளையம் அருகே கெம்பநாயக்கன்பாளையத்தில் பெரும்பள்ளம் அணை உள்ளது. இந்த அணையின் அருகே உள்ள பகுதியில் இருந்து தினமும் நூற்றுக்கணக்கான வாகனங்களில் கிராவல் மற்றும் வண்டல் மண் கடத்தப்படுவதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் வருவாய்த்துறைக்கு புகார் தெரிவித்து உள்ளனர். எனினும் இதுகுறித்து எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் குற்றம்சாட்டி வந்தனர். மேலும் மண் கடத்தி செல்லும் லாரிகள் அதிக வேகத்தில் சென்றதால் அந்த பகுதியில் அடிக்கடி விபத்தும் ஏற்பட்டு வந்தது.

சிறைபிடிப்பு

இந்த நிலையில் நேற்று 3 லாரிகளில் மண் கடத்தப்பட்டு கே.என்.பாளையம் பகுதி வழியாக வந்ததாக கூறப்படுகிறது. உடனே 3 லாரிகளையும் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் தடுத்து நிறுத்தி சிறைபிடித்தனர்.

இதுபற்றி அறிந்ததும் பங்களாப்புதூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று லாாிைய ஓட்டி வந்த டிரைவர்களிடம் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், 'டிரைவர்களிடம் லாரியில் மண் கொண்டு செல்வதற்கான உரிய ஆவணங்கள் இல்லை,' என தெரியவந்தது.

பறிமுதல்

இதைத்தொடர்ந்து 3 லாரிகளையும் போலீசார் பறிமுதல் செய்து சத்தியமங்கலம் தாலுகா அலுவலகத்துக்கு கொண்டு சென்றனர். இதுகுறித்து வருவாய்த்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறாா்கள். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கூறுகையில், 'பெரும்பள்ளம் அணை அருகே உள்ள பகுதியில் இருந்து மண் எடுக்கப்படுகிறது. இதனால் அந்த பகுதியில் ஆழமான பள்ளங்கள் ஏற்பட்டு உள்ளன. இதன்காரணமாக வனவிலங்குகள் அந்த பள்ளத்தில் விழுந்து உயிரிழக்கும் அபாயம் ஏற்பட்டு உள்ளது. எனவே கெம்பநாயக்கன்பாளையம் பகுதியில் இருந்து மண் கடத்தலை தடுக்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.


Next Story