வீரபாண்டி அருகே பரபரப்பு: செல்போன் கோபுரத்தில் ஏறி தொழிலாளி தற்கொலை மிரட்டல்
வீரபாண்டி அருகே செல்போன் கோபுரத்தில் ஏறி கொலை மிரட்டல் விடுத்த தொழிலாளியால் பரபரப்பு ஏற்பட்டது
வீரபாண்டி அருகே உள்ள கோட்டூர் பகுதியில் கையில் புதிய தமிழகம் கட்சி கொடியுடன் நேற்று ஒருவர் வந்தார். பின்னர் அதே பகுதியில் உள்ள செல்போன் கோபுரம் அருகே வந்த அவர் கோபுரத்தில் வேகமாக ஏறினார். இதைக்கண்ட பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதனால் அவரை கீேழ இறங்குமாறு பொதுமக்கள் கூறினர். ஆனால் அதை கேட்காத அவர் கொடியை கையில் பிடித்தபடி வேகமாக ஏறி செல்போன் கோபுரத்தின் உச்சிக்கு சென்றார். பின்னர் அங்கு நின்று கொண்டு கொடியை அசைத்தபடி மேலே இருந்து குதித்து தற்கொலை செய்ய போவதாக தெரிவித்தார். இதுகுறித்து பொதுமக்கள் வீரபாண்டி போலீசார் மற்றும் தீயணைப்பு படையினருக்கு தகவல் கொடுத்தனர்.
சம்பவ இடத்திற்கு வீரபாண்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கோகுலகண்ணன் தலைமையில் போலீசார் மற்றும் தேனி தீயணைப்பு துறை நிலைய அலுவலர் பழனி தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் வந்தனர். இதையடுத்து போலீசார் அவரிடம் பேசினர். அப்போது தங்களது கோரிக்கை குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர். பின்னர் அவர் செல்போன் கோபுரத்தில் இருந்து கீழே இறங்கி வந்தார். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.
விசாரணையில், அவர் கோட்டூர் பகுதியை சேர்ந்த கூலித்தொழிலாளியான கருப்பு துரை (வயது 53). புதிய தமிழகம் கட்சியில் பொறுப்பாளராக உள்ளார். 1984-ம் ஆண்டு கோட்டூரில் கயிறு தொழிற்சாலை இயங்கி வந்துள்ளது. அங்கு அவரது தந்தை காவலாளியாக வேலை செய்து வந்துள்ளார்.
தொழிற்சாலை நஷ்டத்தில் இயங்கியதால் அங்கு இருந்த பொருட்களை கடன் கொடுத்தவர்கள் எடுத்து சென்று விட்டனர், பின்னர் அந்த இடத்தை அவர் பராமரித்து அங்கு இருந்த ஒரு அறையில் அவர் வசித்து வந்தார். இந்த நிலையில் அரசு ஆவின் பால் குளிரூட்டும் நிலையம் கட்டுவதற்காக அந்த அறை இடித்து அகற்றப்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த கருப்பு துரை செல்போன் கோபுரத்தில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்தது தெரியவந்தது. இதுகுறித்து வீரபாண்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.