அண்ணனை கொலை செய்த இறைச்சிக்கடை ஊழியர் உள்பட 3 பேருக்கு ஆயுள் தண்டனை


அண்ணனை கொலை செய்த இறைச்சிக்கடை ஊழியர் உள்பட 3 பேருக்கு ஆயுள் தண்டனை
x

தஞ்சை அருகே தாயிடம் தகராறு செய்த அண்ணனை கொலை செய்த வழக்கில் இறைச்சிக்கடை ஊழியர் உள்பட 3 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து தஞ்சை கோர்ட்டு தீர்ப்பு அளித்துள்ளது.

தஞ்சாவூர்

தஞ்சாவூர், மார்ச்.15-

தஞ்சை அருகே தாயிடம் தகராறு செய்த அண்ணனை கொலை செய்த வழக்கில் இறைச்சிக்கடை ஊழியர் உள்பட 3 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து தஞ்சை கோர்ட்டு தீர்ப்புஅளித்துள்ளது.

தாயிடம் தகராறு

தஞ்சை மாவட்டம் திருவையாறு திருமஞ்சனவீதி முத்துநாயக்கன் தெருவை சேர்ந்தவர் சண்முகவேல். இவருடைய மகன்கள் ராஜதுரை. இவருடைய சகோதரர் கணேசமூர்த்தி (வயது23). இவர்கள் 2 பேரும் இறைச்சிக்கடையில் வேலை பார்த்து வந்துள்ளனர்.இந்த நிலையில் ராஜதுரை தனது தாயிடம், அடிக்கடி தகராறு செய்ததுடன் பணம் கேட்டு தொந்தரவு செய்துள்ளார். சம்பவத்தன்றும் குடிபோதையில் தாயிடம் தகராறு செய்து அவரை தாக்கி உள்ளார். இதில் காயம் அடைந்த அவர் தஞ்சை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார்.

கழுத்தை அறுத்துக்கொலை

இதனை அறிந்த கணேசமூர்த்தி ஏன், அம்மாவிடம் தகராறு செய்கிறாய்? என ராஜதுரையிடம் கேட்ட போது அவர்களிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரம் அடைந்த கணேசமூர்த்தி, தனது அண்ணனை கொலை செய்வது என முடிவு செய்தார். அதன்படி தனது நண்பர்கள் மூலம் கடந்த 4-2-2018 அன்று அண்ணன் ராஜதுரையை ஆற்றங்கரை பகுதிக்கு அழைத்து வந்துள்ளார்.பின்னர் அங்கு வைத்து ராஜதுரையை கொலை செய்து கழுத்தை அறுத்துள்ளனர். மேலும் உடலை ஆற்றில் வீசி விட்டு சென்று விட்டனர். இது குறித்து திருச்சோற்றுத்துறை கிராம நிர்வாக அதிகாரி அர்ச்சனா, திருவையாறு போலீசில் புகார் செய்தார்.

3 பேருக்கு ஆயுள் தண்டனை

புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கணேசமூர்த்தி மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த திருவாரூர் கொடிமரசந்து நேதாஜி சாலையை சேர்ந்த கணேசன் மகன் தம்பிதுரை (24), திருவையாறு அருகே உள்ள திருப்பூந்துருத்தி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த ராதாகிருஷ்ணன் மகன் மணிகண்டன் (27) ஆகிய 3 பேரை கைது செய்தனர்.இந்த வழக்கு தஞ்சை மாவட்ட 2-வது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்த போது வழக்கை நீதிபதி மலர்விழி விசாரித்து, கணேசமூர்த்தி, தம்பிதுரை, மணிகண்டன் ஆகிய 3 பேருக்கும் ஆயுள்தண்டனை விதித்து உத்தரவிட்டார். மேலும் 3 பேருக்கும் தலா ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்தும், அபராதம் கட்ட தவறினால் மேலும் 1 ஆண்டு சிறை தண்டனை விதித்தும் உத்தரவிட்டார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் துரை.தியாகராஜன் ஆஜராகி வாதாடினார்.


Next Story