இறைச்சி கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது
இறைச்சி கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது
புரட்டாசி மாதம் முடிந்து முதல் ஞாயிற்றுக்கிழமை என்பதால் இறைச்சி கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது. விலை குறைவாக இருந்ததால் மீன்கள் வாங்குவதற்காக மக்கள் குவிந்தனர்.
புரட்டாசி மாதம்
புரட்டாசி மாதம் பெருமாளுக்கு உகந்த மாதம். இந்த மாதத்தில் வரும் அனைத்து சனிக்கிழமைகளிலும் பக்தர்கள் விரதம் இருந்து வழிபாடு செய்வார்கள். அன்று பெருமாள் கோவில்களில் வழக்கத்தை விட மக்கள் கூட்டம் அதிகமாக காணப்படும். இதனால் புரட்டாசி மாதம் முழுவதும் பெரும்பாலானோர் இறைச்சி உண்ணுவது கிடையாது.
இந்த நிலையில் புரட்டாசி மாதம் கடந்த 17-ந்தேதியுடன் முடிவடைந்து ஐப்பசி மாதம் தொடங்கியது. இந்த நிலையில் புரட்டாசி மாதம் முடிந்து முதல் ஞாயிற்றுக்கிழமை நேற்று வந்ததால் இறைச்சி கடைகளில் வழக்கத்தை விட மக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.
இறைச்சி கடைகளில் கூட்டம்
குறிப்பாக ஆட்டு இறைச்சி மற்றும் கோழி இறைச்சி கடைகளில் கடைகளில் வழக்கத்தை விட மக்கள் கூட்டம் அதிக அளவில் காணப்பட்டடது. காலையில் இருந்தே மக்கள் அதிக அளவில் வந்து இறைச்சிகளை வாங்கி சென்றனர். தஞ்சை கீழவாசல், பூக்காரத்தெரு, மருத்துவக்கல்லூரி சாலை, கரந்தை, பள்ளிஅக்ரகாரம் உள்ளிட்டபகுதிகளில் இறைச்சி கடைகளில் மக்கள் அதிக அளவில் வந்து வாங்கி சென்றனர். இதே போல் தஞ்சை வெள்ளைப்பிள்ளையார் கோவில் பகுதியில் உள்ள மீன்மார்க்கெட் பகுதியிலும் மக்கள் கூட்டம் அதிக அளவில் காணப்பட்டது. மீன்கள் விலை குறைவாக இருந்தாலம் அதிக அளவில் வந்து மக்கள் மீன்களை வாங்கி சென்றனர்.
மீன்கள் விலை
மேலும் இன்று (திங்கட்கிழமை) தீபாவளி பண்டிகை என்பதால் இறைச்சி கடைகளில் மக்கள் கூட்டம் அதிக அளவில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. நேற்று தஞ்சை மீன்மார்க்கெட்டில் உயிர் விரால் மீன் (கிலோ) ரூ.300 முதல் 500 வரையும், உயிர் கெண்டை ரூ.150 முதல் 180 வரையும் விற்கப்பட்டது. இறால் ரூ.250 முதல் ரூ.350 வரையும், சங்கரா மீன் ரூ.250 முதல் ரூ.300 வரையும், பாறை மீன் ரூ.150-க்கும் விற்பனை செய்யப்பட்டது.