கோர்ட்டு உத்தரவால் மாணவருக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது


கோர்ட்டு உத்தரவால்  மாணவருக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது
x

நிரந்தர மக்கள் கோர்ட்டு உத்தரவால் மாணவருக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது

திருநெல்வேலி

நெல்லை:

நிரந்தர மக்கள் கோர்ட்டு உத்தரவால் மாணவருக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.

மனு தாக்கல்

தென்காசி மாவட்டம் சிவகிரி அருகே உள்ள சங்கனாப்பேரி கிராமத்தை சேர்ந்தவர் முத்துக்குமார். இவர் நெல்லை நிரந்தர மக்கள் கோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்தார்.

அந்த மனுவில், நான் 2018-2021-ம் கல்வியாண்டில் நெல்லை அருகே உள்ள ஒரு. பாலிடெக்னிக் கல்லூரியில் டிப்ளமோ எந்திரவியல் துறையில் படித்தேன். என்னை கல்லூரியில் சேர்க்கும் பொழுது கல்லூரி நிர்வாகம் டியூஷன் கட்டணம் கட்டத்தேவையில்லை என்றும், எனக்கு ஆதிதிராவிடர் நலத்துறை மூலம் வழங்கக்கூடிய படிப்பு உதவித்தொகையை கல்லூரி நிர்வாகம் பெற்றுக்கொள்ளும் என்றும், அதனால் டியூஷன் கட்டணம் கட்டத்தேவையில்லை என்று கூறியது.

காலம் தாழ்த்தி வருகிறது

இதனடிப்படையில் அங்கு சேர்ந்து படித்து 2021-ம் ஆண்டு மே மாதம் படிப்பை முடித்தேன். பாலிடெக்னிக் தேர்வில் முழுமையாக தேர்ச்சி பெற்றேன்.

ஆனால் எனக்கு பட்டயப்படிப்பு சான்றிதழ், மதிப்பெண் சான்றிதழ், டி.சி, சாதி சான்றிதழ் ஆகியவற்றை கல்லூரி நிர்வாகம் வழங்காமல் ஓராண்டாக காலம் தாழ்த்தி வருகிறது.

இதனால் வேலைக்கு செல்ல முடியாத நிலை மற்றும் மேல் படிப்பு தொடர முடியாத நிலையில் உள்ளேன். கல்லூரி நிர்வாகத்திடம் பலமுறை கேட்டேன். அதற்கு கல்லூரி நிர்வாகம் அதிகமான பணத்தை கேட்டு அதற்குரிய சான்றிதழ் வழங்காமல் இருந்து வருகிறார்கள். எனவே எனது சான்றிதழை பெற்று தரவேண்டும், என்று கூறியிருந்தார்.

விசாரணை

இந்த மனுவை விசாரித்த நீதிபதி சமீனா, கல்லூரி முதல்வர் விசாரணைக்கு ஆஜராக சம்மன் அனுப்பினார். கல்லூரி சார்பில் கல்லூரி மக்கள் தொடர்பு அலுவலர் ஆஜராகி மாணவர் முத்துக்குமார் படிப்புக்கு ஆதிதிராவிட நலத்துறை மூலம் வழங்கக்கூடிய படிப்பு உதவித்தொகை, ஆதிதிராவிட நலத் துறையில் நிலுவையில் உள்ளதாக தெரிவித்தார்.

அதனடிப்படையில் நிரந்தர மக்கள் கோர்ட்டு ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலருக்கு சம்மன் அனுப்பியது. அந்த அலுவலகத்தில் உள்ள கண்காணிப்பாளர் ஆஜராகி கல்லூரி நிர்வாகம் மாணவர் முத்துக்குமாருக்கு படிப்பு உதவித்தொகை பெறுவதற்கான வெப்சைட்டில் தவறாக பதிவு செய்ததாகவும், அதனால் தான் படிப்பு உதவித்தொகை பெற முடியவில்லை எனவும், படிப்பு உதவித் தொகை கிடைப்பதற்கு தங்கள் அலுவலகம் மூலம் திரும்ப பதிவு செய்து அனுப்பினால் கல்லூரி நிர்வாகத்திற்கு உதவித்தொகை வழங்குவதாகவும், தெரிவித்து உடனடியாக அவருக்கு சான்றிதழ் வழங்குவதாக கூறினார்.

சான்றிதழ்

இதனடிப்படையில் நீதிபதி சமீனா, கல்லூரி முதல்வருக்கு, முத்துக்குமாருக்குரிய சான்றிதழ்களை வழங்க உத்தரவிட்டார்.

இதன்படி நேற்று கல்லூரி நிர்வாகம் அந்த சான்றிதழ்களை கோர்ட்டில் சமர்ப்பித்தனர். நீதிபதி சமீனா அந்த சான்றிதழை மாணவர் முத்துக்குமாரிடம் வழங்கினார்.


Next Story