ஈரோடு கிழக்கு தொகுதியில் இடைத்தேர்தல்:தயார் நிலையில் வாக்குப்பதிவு எந்திரங்கள்
ஈரோடு கிழக்கு தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெற உள்ளதால் வாக்குப்பதிவு எந்திரங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளன.
ஈரோடு கிழக்கு தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெற உள்ளதால் வாக்குப்பதிவு எந்திரங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளன.
வாக்குப்பதிவு எந்திரங்கள்
ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, மொடக்குறிச்சி, பெருந்துறை, பவானி, அந்தியூர், கோபி, பவானிசாகர் (தனி) ஆகிய 8 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. இந்த தொகுதிக்கான வாக்குப்பதிவு எந்திரங்கள், ஈரோடு ரெயில்வே காலனி மேல்நிலை பள்ளிக்கூடத்திலும், கருங்கல்பாளையம் காமராஜர் மேல்நிலை பள்ளிக்கூடத்திலும் பாதுகாப்பாக வைக்கப்பட்டு உள்ளன.
கடந்த 2021-ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலின் போது பதிவான வாக்குப்பதிவு எந்திரங்கள், அந்தந்த தொகுதிக்கான தாலுகா அலுவலகங்களிலும், ஈரோடு கிழக்கு தொகுதிக்கு ஈரோடு மாநகராட்சி அலுவலக பாதுகாப்பு அறையிலும் வைக்கப்பட்டு உள்ளன.
தேர்தல் பிரிவு அலுவலகம்
இதற்கிடையில், ஈரோடு மீனாட்சிசுந்தரனார் ரோட்டில் உள்ள ஆர்.டி.ஓ. அலுவலக வளாகத்தில் மாவட்ட தேர்தல் பிரிவு அலுவலகம் ரூ.80 லட்சம் செலவில் கட்டி திறக்கப்பட்டது. தேர்தல் ஆணைய உத்தரவுப்படி பல்வேறு இடங்களில் வைக்கப்பட்டுள்ள வாக்குப்பதிவு எந்திரங்களை படிப்படியாக இங்கு மாற்ற முடிவு செய்யப்பட்டது. இந்த நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தல் வருகிற பிப்ரவரி 27-ந்தேதி நடைபெற உள்ளது. இதனால் கூடுதல் வாக்குப்பதிவு எந்திரங்கள் தேவைப்படும் என்ற அடிப்படையில் ஈரோடு மேற்கு தொகுதிக்கான ஓட்டுப்பெட்டிகளை நகர்வு செய்ய முடிவு செய்தனர்.
அதன்படி ஈரோடு தாலுகா அலுவலக வளாகத்தில் உள்ள, 326 வி.வி.பேட், 403 வாக்குப்பதிவு எந்திரங்கள், 404 கட்டுப்பாட்டு எந்திரங்கள் நேற்று லாரி மூலம், மாவட்ட தேர்தல் பிரிவு அலுவலகத்துக்கு கொண்டு வரப்பட்டு தயார் நிலையில் உள்ளது. இதைத்தொடர்ந்து பிற இடங்களில் உள்ள வாக்குப்பதிவு எந்திரங்கள் அனைத்தும் இங்கு ஒரே இடத்திற்கு கொண்டு வரப்பட்டு பாதுகாக்கப்பட உள்ளதாக தேர்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர்.