ஏ.டி.எம்.கார்டை மாற்றிக்கொடுத்துபெண்ணிடம் ரூ.52 ஆயிரம் அபேஸ்


ஏ.டி.எம்.கார்டை மாற்றிக்கொடுத்துபெண்ணிடம் ரூ.52 ஆயிரம் அபேஸ்
x
தினத்தந்தி 30 March 2023 1:08 AM IST (Updated: 30 March 2023 1:38 AM IST)
t-max-icont-min-icon

கடலூர் முதுநகரில் பெண்ணிடம் ஏ.டி.எம்.கார்டை மாற்றிக்கொடுத்து ரூ.52 ஆயிரம் அபேஸ் செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

கடலூர்

கடலூர்முதுநகர், கடலூர் முதுநகர் அருகே சுனாமி நகரை சேர்ந்தவர் ரவி. இவரது மனைவி கனிமொழி (வயது 45). கடலூர் அம்மா உணவகத்தில் வேலை பார்த்து வருகிறார். இவர் கடலூர் முதுநகரில் உள்ள ஒரு ஏ.டி.எம். மையத்தில் தனது வங்கி கணக்கில் இருந்து பணம் எடுக்க சென்றார். ஆனால் ஏ.டி.எம். எந்திரத்தில் இருந்து பணம் எடுக்க தெரியாததால் அவர், அருகில் இருந்த ஒருவரிடம் தனது ஏ.டி.எம். கார்டு மற்றும் ரகசிய எண்களை கொடுத்து பணம் எடுத்து தருமாறு கேட்டுள்ளார். அதனை வாங்கிய அந்த நபர், ஏ.டி.எம். கார்டை எந்திரத்தில் செலுத்தினார். பின்னர் அவர் கனிமொழியிடம், உங்களது வங்கி கணக்கில் பணம் இல்லை. அதனால் பணம் எடுக்கமுடியவில்லை என்று கூறிவிட்டு அவரிடம் ஏ.டி.எம். கார்டை கொடுத்துவிட்டு சென்றார்.

இதையடுத்து கனிமொழி வீட்டுக்கு சென்றார். இந்த நிலையில் அவரது வங்கி கணக்கில் இருந்து மொத்தம் ரூ.52 ஆயிரம் எடுக்கப்பட்டது குறித்த குறுந்தகவல் செல்போனுக்கு வந்தது.

ரூ.52 ஆயிரம் அபேஸ்

அப்போதுதான் அந்த நபர் தன்னிடம் ஏ.டி.எம். கார்டை மாற்றி கொடுத்ததோடு, தனது ஏ.டி.எம். கார்டை பயன்படுத்தி ரூ.52 ஆயிரம் அபேஸ் செய்தது கனிமொழிக்கு தெரிந்தது. இது குறித்து அவர் கடலூர் முதுநகர் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் கடலூர் திருப்பாதிரிப்புலியூர் கம்மியம்பேட்டை, பகுதியை சேர்ந்த கண்ணன் மகன் குமரன் (வயது 34) என்பவர் கனிமொழியின் ஏ.டி.எம். கார்டை வாங்கி உதவி செய்வது போல் நடித்து அவரது வங்கி கணக்கில் இருந்து பணம் அபேஸ் செய்தது தெரிந்தது. இதையடுத்து குமரனை போலீசார் கைது செய்தனர்.


Next Story