ராகுல்காந்தி நடைபயணத்தால் மக்களுக்கு எந்த பயனும் இல்லை: சீமான்


ராகுல்காந்தி நடைபயணத்தால்  மக்களுக்கு எந்த பயனும் இல்லை: சீமான்
x

‘ராகுல்காந்தி நடைபயணம் அவரது உடலுக்கும், தொண்டர்களுக்கும் புத்துணர்வை கொடுக்குமே தவிர மக்களுக்கு எந்த பயனும் இல்லை’ என்று சீமான் கூறினார்.

தூத்துக்குடி

திருச்செந்தூர்:

'ராகுல்காந்தி நடைபயணம் அவரது உடலுக்கும், தொண்டர்களுக்கும் புத்துணர்வை கொடுக்குமே தவிர மக்களுக்கு எந்த பயனும் இல்லை' என்று சீமான் கூறினார்.

சாமி தரிசனம்

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நேற்று குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்தார். அவருடைய மகனுக்கு முடி காணிக்கை செலுத்தியும், பச்சரிசி மற்றும் வெல்லம் ஆகியவை துலாபாரத்திற்கு கொடுத்தும் வேண்டுதலை நிறைவேற்றினார்.

பேட்டி

பின்னர் சீமான் நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழக கோவில்களில் தமிழில் அர்ச்சனை செய்ய வேண்டும் என்பதுதான் எங்களுடைய விருப்பம். அரசு சட்டம் இயற்றினால் மட்டும் போதாது அதை செயல்படுத்த வேண்டும்.

தமிழகத்தின் வளர்ச்சி திட்டங்களுக்கு திராவிட மாடல் என்று சொல்வதைவிட தமிழ்நாட்டு மாடல் என்று சொன்னால் ஆறுதலாக இருக்கும்.

ராகுல் காந்தியின் நடைபயணம் அவரது உடலுக்கும், தொண்டர்களுக்கும் புத்துணர்வை தருமே தவிர மக்களுக்கு எந்த பயனும் இல்லை. விடுதலை பெற்று இந்த நாட்டை 50 ஆண்டுகள் இவர்கள் தான் ஆண்டுள்ளனர்.

மாணவர்களின் வாக்குகள்

ஜி.எஸ்.டி., நீட் போன்ற திட்டங்களுக்கு தொடக்கமே காங்கிரஸ் கட்சிதான். இதனால் தான் அந்த கட்சியால் நாடாளுமன்றத்தில் எதிர்த்து பேச முடியவில்லை. தமிழகத்தில் நிதி நிலைமை மோசமாக இருப்பதாக கூறி குடும்ப தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் கொடுக்க முடியவில்லை என தெரிவித்த தமிழக அரசு, தற்போது மாணவ-மாணவிகளுக்கு ஆயிரம் ரூபாய் கொடுப்பது ஏன்?. கல்லூரிகளில் படிக்கும் மாணவ-மாணவிகளின் வாக்குகளை தனது பக்கம் திருப்புவதற்காக இந்த திட்டம் செயல்படுத்துகிறது.

போதைப்பொருள்

கஞ்சா, குட்கா, அபின், ஹெராயின் போன்றவைகள் முருகன் மீது ஆணையாக போதைப்பொருட்கள் என ஏற்றுக்கொள்கிறேன். ஆனால் டாஸ்மாக் கடைகளில் விற்கக்கூடிய மதுபானங்கள் என்பது தீர்த்தமா?. இதை நிறுத்தாமல் அரசு, போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு நடத்துவது வேடிக்கையாக உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story