பள்ளி மாணவ-மாணவிகளுக்கு சைக்கிள் போட்டி
பள்ளி மாணவ-மாணவிகளுக்கு சைக்கிள் போட்டி
திருப்பூர்
அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு திருப்பூர் மாவட்டத்தில் பள்ளி மாணவ-மாணவிகளுக்கான சைக்கிள் போட்டி வருகிற 9-ந் தேதி திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக்கல்லூரி மைதானத்தில் நடக்கிறது.
சைக்கிள் போட்டி
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் திருப்பூர் மாவட்ட விளையாட்டு பிரிவின் சார்பில் தமிழக முதல்-அமைச்சரின் உத்தரவுப்படி பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் விழாவை கொண்டாடும் வகையில் திருப்பூர் மாவட்ட அளவில் அண்ணா சைக்கிள் போட்டி வருகிற 9-ந் தேதி காலை 7 மணிக்கு திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக்கல்லூரி மைதானத்தில் நடைபெற உள்ளது.
13 வயதுக்கு உட்பட்ட மாணவர்களுக்கு 15 கிலோ மீட்டர் தூரமும், மாணவிகளுக்கு 10 கிலோ மீட்டர் தூரமும், 15 வயதுக்கு உட்பட்ட மற்றும் 17 வயதுக்கு உட்பட்ட மாணவர்களுக்கு 20 கிலோ மீட்டர் தூரமும், மாணவிகளுக்கு 15 கிலோ மீட்டர் தூரமும் சைக்கிள் போட்டி நடத்தப்படுகிறது. போட்டியில் பங்கேற்கும் பள்ளி மாணவ-மாணவிகள் இந்தியாவில் தயாரான சாதாரண சைக்கிளை பயன்படுத்த வேண்டும். கியர் பொருத்தப்பட்ட சைக்கிளை பயன்படுத்தக்கூடாது. பள்ளி தலைமையாசிரியரிடம் வயது சான்றிதழ் மற்றும் இ.எம்.ஐ.எஸ். பெற்று வர வேண்டும்.
9-ந் தேதி நடக்கிறது
போட்டி தொடங்குவதற்கு 1 மணி நேரத்துக்கு முன் கல்லூரிக்கு வந்து தங்கள் பெயரை பதிவு செய்ய வேண்டும். போட்டியில் எதிர்பாராத விபத்து, தனிப்பட்ட பொது இழப்புக்கு மாணவ-மாணவிகளே பொறுப்பு ஏற்க வேண்டும் என்று ஒப்புதல் அளிக்க வேண்டும்.
முதல் மூன்று இடங்களில் வெற்றி பெறுபவர்களுக்கு சான்றிதழ் மற்றும் பரிசுத்தொகை வழங்கப்படும். முதல்பரிசாக ரூ.5 ஆயிரம், 2-வது பரிசாக ரூ.3 ஆயிரம், 3-வது பரிசாக ரூ.2 ஆயிரம், 4-வது இடம் முதல் 10-வது இடம் வரை வெற்றி பெறுபவர்களுக்கு சான்றிதழும், தலா ரூ.250-ம் வழங்கப்படும். அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்கள் தங்கள் பள்ளியில் படிக்கும் மாணவ-மாணவிகளை வயது சான்றிதழுடன் வருகிற 9-ந் தேதி காலை 6 மணிக்கு போட்டி நடக்கும் திருப்பூர் சிக்கண்ணா அரசு கல்லூரி மைதானத்துக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
இந்த தகவலை திருப்பூர் மாவட்ட கலெக்டர் வினீத் தெரிவித்துள்ளார்.