ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலையொட்டி மாநகராட்சி அலுவலகத்தில் கட்டுப்பாட்டு அறை திறப்பு
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலையொட்டி மாநகராட்சி அலுவலகத்தில் கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலையொட்டி மாநகராட்சி அலுவலகத்தில் கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது.
தேர்தல் கட்டுப்பாட்டு அறை
ஈரோடு கிழக்கு தொகுதியில் எம்.எல்.ஏ.வாக இருந்த திருமகன் ஈவெரா கடந்த 4-ந் தேதி மாரடைப்பால் இறந்தார். இதைத்தொடர்ந்து இந்த தொகுதி காலியாக அறிவிக்கப்பட்டு வருகிற பிப்ரவரி மாதம் 27-ந்தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வந்தன.
மேலும் ஈரோடு மாநகராட்சி அலுவலகம் தேர்தல் நடத்தும் அலுவலகமாக மாறி உள்ளது. இந்த நிலையில் நேற்று ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில் தேர்தல் கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டது. தேர்தல் சம்பந்தமாக வரும் புகார்களை பெறுவதற்காக இந்த கட்டுப்பாட்டு அறை அமைக்கப் பட்டுள்ளது.
இலவச எண்
இதுகுறித்து தேர்தல் நடத்தும் அலுவலரும், மாநகராட்சி ஆணையாளருமான சிவகுமார் கூறியதாவது:-
ஈரோடு கிழக்கு தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெறுவதையொட்டி தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன. மேலும் மாநகராட்சி அலுவலகத்தில் 24 மணி நேரமும் செயல்படக்கூடிய தேர்தல் கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது. இங்கு சுழற்சி முறையில் 24 மணி நேரமும் இதற்கென்று தனியாக அலுவலர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
இதற்காக 180042594890 என்ற இலவச எண்ணும் வழங்கப்பட்டுள்ளது. இந்த எண்ணை 24 மணி நேரமும் தொடர்பு கொண்டு தேர்தல் தொடர்பான புகார்களை தெரிவிக்கலாம். இங்கு வரும் புகார்கள் பறக்கும் படைக்கும், தேர்தல் அதிகாரிக்கும் தெரிவிக்கப்படும்.
ரூ.50 ஆயிரத்துக்கு மேல்...
இடைத்தேர்தல் நடைபெறும் ஈரோடு கிழக்கு தொகுதியில் 4 பேர் கொண்ட நிலை கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. தொகுதி எல்லைகளில் இவர்கள் சுழற்சி முறையில் வாகன தணிக்கையில் ஈடுபடுவார்கள்.
இந்த குழுவில் ஒரு டிரைவர், ஒரு புகைப்பட கலைஞர், ஒரு போலீசார் உள்பட 4 பேர் இருப்பார்கள். தற்போது தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருப்பதால் உரிய ஆவணம் இல்லாமல் ரூ.50 ஆயிரத்துக்கு மேல் எடுத்துச்செல்ல கூடாது. திருமண மண்டபங்களில் கூட்டம் அல்லது நிகழ்ச்சி நடத்துபவர்கள் தேர்தல் நடத்தை விதிகளை பின்பற்ற உத்தரவிடப்பட்டுள்ளது. நிலை கண்காணிப்பு குழுவை தொடர்ந்து பறக்கும் படை அமைக்கப்பட உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.