ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிட ஓ.பி.எஸ் அணி-அ.ம.மு.க. வேட்பாளர்கள் மனு தாக்கல்


ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிட ஓ.பி.எஸ்.அணி மற்றும் அ.ம.மு.க. வேட்பாளர்கள் நேற்று வேட்புமனு தாக்கல் செய்தனர்.

ஈரோடு

ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிட ஓ.பி.எஸ்.அணி மற்றும் அ.ம.மு.க. வேட்பாளர்கள் நேற்று வேட்புமனு தாக்கல் செய்தனர்.

ஓ.பி.எஸ். அணி

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் வருகிற 27-ந்தேதி நடக்கிறது. இதையொட்டி கடந்த மாதம் 31-ந்தேதி முதல் வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நேற்று அ.தி.மு.க. ஓ.பன்னீர்செல்வம் அணி மற்றும் அ.ம.மு.க. வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளதாக அறிவித்து இருந்தனர்.

அதன்படி அ.தி.மு.க. ஓ.பன்னீர்செல்வம் அணியினர் வேட்பு மனு தாக்கல் செய்வதற்காக, ஈரோடு முனிசிபல் காலனி பகுதியில் அமைக்கப்பட்டு உள்ள தேர்தல் பணிமனையில் இருந்து ஈரோடு மாநகராட்சி அலுவலகத்திற்கு வந்தனர்.

பின்னர் மாநகராட்சி ஆணையாளரும், ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலருமான சிவகுமாரிடம், அ.தி.மு.க. ஓ.பன்னீர்செல்வம் அணி வேட்பாளர் செந்தில்முருகன் தனது வேட்புமனுவை வழங்கினார். அப்போது அவருடன், ஈரோடு மாநகர் மாவட்ட செயலாளர் முருகானந்தம், முன்னாள் அமைச்சர் கு.ப.கிருஷ்ணன் ஆகியோர் உடன் இருந்தனர்.

அ.ம.மு.க.

அ.ம.மு.க.வினர் சார்பில் ஈரோடு பெருந்துறை ரோடு பகுதியில் அமைக்கப்பட்டு உள்ள தேர்தல் பணிமனையை முன்னாள் அமைச்சர் சண்முகவேலு ரிப்பன்வெட்டி திறந்து வைத்தார். பின்னர் மருத்துவர் அணி மாநிலச்செயலாளர் டாக்டர் கிங், அ.ம.மு.க. வேட்பாளர் சிவபிரசாந்த் மற்றும் கட்சியினர் அங்கிருந்து பெருந்துறைரோடு, மீனாட்சி சுந்தரனார் ரோடு வழியாக வேட்புமனு தாக்கல் செய்வதற்காக ஈரோடு மாநகராட்சி அலுவலகம் நோக்கி ஊர்வலமாக வந்தனர்.

தடுத்து நிறுத்தம்

இதைத்தொடர்ந்து மாநகராட்சி அலுவலகத்தில் இருந்து 200 மீட்டர் தொலைவில் அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். பின்னர் வேட்புமனு தாக்கல் செய்ய வேட்பாளருடன் 5 பேர் மட்டும் அனுமதிக்கப்பட்டனர். அதைத்தொடர்ந்து அ.ம.மு.க. வேட்பாளர் மாநகராட்சி அலுவலகத்திற்கு வந்து தனது வேட்புமனுவை, தேர்தல் நடத்தும் அலுவலரான சிவகுமாரிடம் வழங்கினார். முன்னதாக அமைச்சர் சண்முகவேலு நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது, 'எங்களுக்கு தேர்தல் களம் புதியதல்ல. நாடாளுமன்ற தேர்தல், சட்டமன்ற தேர்தல், உள்ளாட்சி தேர்தல் என பல தேர்தல்களை சந்தித்துள்ளோம். ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தலில் மக்களை சந்தித்து ஆளும் அரசு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றாததை மக்களிடம் எடுத்துரைத்து வாக்கு சேகரிப்போம். டி.டி.வி.தினகரன் வருகிற 12-ந்தேதி முதல் 25-ந்தேதி வரை ஈரோட்டில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட உள்ளார். தேர்தல் ஆணையம் ராணுவத்தை கொண்டு வந்து பணம் பட்டுவாடாவை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றார்.


Next Story