மின்கட்டண உயர்வால் சிறுதொழில்கள் பாதிக்கப்பட்டுள்ளது- ஈரோட்டில் முன்னாள் அமைச்சர் தங்கமணி பேச்சு


மின்கட்டண உயர்வால் சிறுதொழில்கள் பாதிக்கப்பட்டுள்ளது- ஈரோட்டில் முன்னாள் அமைச்சர் தங்கமணி பேச்சு
x

மின்கட்டண உயர்வால் சிறுதொழில்கள் பாதிக்கப்பட்டுள்ளது என்று ஈரோட்டில் முன்னாள் அமைச்சர் தங்கமணி கூறினார்.

ஈரோடு


மின்கட்டண உயர்வால் சிறுதொழில்கள் பாதிக்கப்பட்டுள்ளது என்று ஈரோட்டில் முன்னாள் அமைச்சர் தங்கமணி கூறினார்.

வேட்பாளர் மேடை

ஈரோடு மாவட்ட அனைத்து தொழில் வணிக சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில், ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்காக வேட்பாளர் மேடை நிகழ்ச்சி ஈரோட்டில் நேற்று நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு கூட்டமைப்பின் தலைவர் ராஜமாணிக்கம் தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் ரவிச்சந்திரன் வரவேற்று பேசினார்.

அத்திக்கடவு -அவினாசி திட்டம்

கூட்டத்தில் முன்னாள் மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி பேசும்போது கூறியதாவது:-

அத்திக்கடவு -அவினாசி திட்டத்திற்காக ரூ.1,600 கோடியை அ.தி.மு.க. அரசு ஒதுக்கி அதற்கான பணிகள் வேகமாக நடந்தது. 10 சதவீத பணிகள் மட்டும் நிறைவு பெறாமல் இருந்ததால் நாங்கள் அதை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரமுடியவில்லை. அந்த 10 சதவீத பணிகளைக்கூட கடந்த 2 ஆண்டுகள் ஆகியும் ஆளும் கட்சியினரால் நிறைவேற்ற முடியவில்லை.

கடந்த, 2001 -2006-ம் ஆண்டு அ.தி.மு.க. ஆட்சியில் தமிழகத்தின் மின் தேவை 9 ஆயிரம் மெகாவாட்டாக இருந்தது. அப்போது 10 ஆயிரத்து 600 மெகாவாட்டுக்கு மேல் மின் உற்பத்தி செய்து, தன்னிறைவு பெற்றோம். மீதமுள்ள மின்சாரத்தை கர்நாடகாவுக்கு வழங்கினோம். 2006 -2011-ம் ஆண்டு தி.மு.க. ஆட்சியில் 9 ஆயிரம் மெகாவாட் அளவுக்கும் குறைவான மின்சாரம் உற்பத்தியானதால், அனைத்து துறைகளும் மின்தடையால் முடங்கியது.

அதிகவாக்குகள்

தற்போது தி.மு.க. அரசு மின் கட்டணத்தை உயர்த்தி உள்ளது. இதனால் சிறுதொழில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. ரூ.1 லட்சம் மதிப்புடைய விசைத்தறி ரூ.30 ஆயிரத்துக்கு விற்பனை செய்யும் நிலை ஏற்பட்டு உள்ளது. வீட்டு வாடகை உயர்வு காரணமாக ஏராளமான தொழிலாளர்கள் ஈரோட்டை விட்டு வெளியேறி உள்ளனர்.

தற்போதையை தி.மு.க. அரசு மக்களிடம் வெறுப்பை பெற்றுள்ளது. எனவே இந்த இடைத்தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளர் கே.எஸ்.தென்னரசு அதிக வாக்குகள் வித்தியாசத்தில் நிச்சயம் வெற்றி பெறுவார். இந்த வெற்றி தி.மு.க.வினருக்கு எச்சரிக்கை மணி அடிக்கும் வகையில் இருக்க வேண்டும்.

இவ்வாறு முன்னாள் அமைச்சர் தங்கமணி கூறினார்.

கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் கே.ஏ.செங்கோட்டையன், கே.சி.கருப்பணன், தங்கமணி, மா.பா.பாண்டியராஜன், கே.வி.ராமலிங்கம், முன்னாள் எம்.எல்.ஏ.வும், ஈரோடு கிழக்கு தொகுதி அ.தி.மு.க. வேட்பாளருமான கே.எஸ்.தென்னரசு ஆகியோர் கலந்து கொண்டு பேசினார்கள்.


Next Story