ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் வாக்காளர்களை அடைத்து வைத்தால் போராட்டத்தில் குதிப்போம்- எடப்பாடி பழனிசாமி பேட்டி
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் வாக்காளர்களை அழைத்து வந்து அடைத்து வைத்தால் போராட்டத்தில் குதிப்போம் என அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் வாக்காளர்களை அழைத்து வந்து அடைத்து வைத்தால் போராட்டத்தில் குதிப்போம் என அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.
சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு
அ.தி.மு.க.வின் இடைக்கால பொதுச்செயலாளர் தொடர்பான வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு நேற்று தீர்ப்பு வழங்கியது. இதையடுத்து அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஈரோடு வில்லரசம்பட்டியில் உள்ள ஒரு தனியார் ஓட்டலில் கட்சி நிர்வாகிகளை சந்தித்தார். அவருக்கு அ.தி.மு.க. நிர்வாகிகள் வாழ்த்து தெரிவித்தனர். அதன்பிறகு எடப்பாடி பழனிசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது கூறியதாவது:-
சுப்ரீம் கோர்ட்டு மூலமாக அ.தி.மு.க.வுக்கு வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பு கிடைத்து இருக்கிறது. அ.தி.மு.க.வின் 1½ கோடி தொண்டர்களும் எழுச்சி பெற்று இருக்கிறார்கள்.
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் தேனீக்களை போல சுறுசுறுப்பாக கட்சியின் தொண்டர்கள் வாக்கு சேகரித்து வருகிறார்கள். பல்லாயிரக்கணக்கான வாக்குகள் வித்தியாசத்தில் வேட்பாளர் தென்னரசு வெற்றி பெறுவார்.
வெற்றி பாதை
எம்.ஜி.ஆர். சோதனையை சந்தித்து தான் இந்த இயக்கத்தை தொடங்கினார். ஜெயலலிதாவும் பல்வேறு சோதனைகளை சந்தித்து தான் மீண்டும் எம்.ஜி.ஆரின் ஆட்சியை கொண்டு வந்தார்.. அவரது மறைவுக்கு பிறகு சோதனையை சந்திதோம்.
அந்த சோதனையையும் சுப்ரீம் கோர்ட்டு மூலமாக வென்று இருக்கிறோம். இந்த தீர்ப்பு அ.தி.மு.க.வுக்கு வெற்றி பாதையை உருவாக்கி கொடுத்து இருக்கிறது.
இந்த இடைத்தேர்தலில் மக்களின் மனநிலையை பொறுத்தவரை அ.தி.மு.க. உறுதியாக வெற்றி பெறும். கடந்த 22 மாத தி.மு.க. ஆட்சியில் மக்களுக்கு எந்த நன்மையும் கிடைக்கவில்லை. ஈரோடு கிழக்கு தொகுதியில் ஒரு துரும்பைக்கூட தி.மு.க. ஆட்சியில் செய்யவில்லை. அ.தி.மு.க. ஆட்சியில் இருந்தபோது நிறைய திட்டங்களை நிறைவேற்றி உள்ளோம். குறிப்பாக குடிநீர் திட்டம், அரசு ஆஸ்பத்திரியை சூப்பர் ஸ்பெஷாலிட்டி ஆஸ்பத்திரியாக தரம் உயர்த்துவது, ஈரோட்டில் இருந்து பெருந்துறை, கோபி, திருச்செங்கோடு ஆகிய பகுதிகளுக்கு செல்லும் சாலையை விரிவாக்கம் செய்தல், ஈரோடு அரசு ஆஸ்பத்திரி அருகில் மேம்பாலம், பள்ளிபாளையத்தில் ஆற்று பாலம் கட்டுதல் போன்ற பல திட்டங்களை கொண்டு வந்தோம். எனவே இந்த தொகுதியில் உள்ள வாக்காளர்கள் அதிக நன்மைகளை பெற்றிருக்கிறார்கள்.
ஜனநாயக படுகொலை
தமிழகத்தில் காவல் துறை செயல்படுகிறதா? என்ற சந்தேகம் உள்ளது. தேர்தல் ஆணையம் இருக்கிறதா? என்று கேள்விக்குறிதான் உள்ளது. வாக்காளர்களின் ஏழ்மை நிலையை கருதி அவர்களை, ஆடு, மாடுகளை அடைப்பதுபோல கூடாரத்தில் அடைத்து வைத்து சிறை வைக்கிறார்கள். அவர்களுக்கு இயற்கை உபாதைக்கு செல்ல வேண்டுமென்றாலும்கூட அனுமதிப்பதில்லை. இங்கு ஜனநாயக படுகொலை நடக்கிறது. திருமங்கலம் இடைத்தேர்தல் பார்முலா என்று கூறினார்கள். தற்போது ஈரோடு இடைத்தேர்தலில் பட்டி பார்முலா வந்து உள்ளது.
நாங்கள் டெல்லி, சென்னை ஆகிய இடங்களில் தேர்தல் ஆணையத்தில் புகார் கொடுத்தோம். மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் புகார் கொடுத்தோம். இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. நாளையும் (அதாவது இன்று) வாக்காளர்களை அழைத்து வந்து அடைத்து வைத்தால் அ.தி.மு.க.வினர் போராட்டத்தில் குதிப்போம்.
பொதுச்செயலாளர் பதவி
தேர்தல் ஆணையத்துக்கு தீர்ப்பின் அனைத்து விவரங்களையும் சமர்ப்பிப்போம். அதற்கான நடவடிக்கையை தொடங்கி உள்ளோம். கட்சியின் பொதுச்செயலாளர் பதவிக்கான தேர்தலை நடத்த விரைவில் மூத்த நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி முடிவு செய்யப்படும். முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்த நாள் விழா ஒவ்வொரு ஆண்டும் சிறப்பாக கொண்டாடப்படும். நாளை (அதாவது இன்று) சென்னையில் கொண்டாட உள்ளேன்.
இவ்வாறு எடப்பாடி பழனிசாமி கூறினார்.
சந்திப்பு
முன்னதாக அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி ஈரோடு வில்லரசம்பட்டியில் உள்ள ஒரு தனியார் ஓட்டலில் நேற்று மாலை அ.தி.மு.க. நிர்வாகிகளை சந்தித்தார். அங்கு வந்த அவரை முன்னாள் அமைச்சர்கள் மற்றும் மூத்த நிர்வாகிகள் உற்சாகமாக வரவேற்றனர். கட்சி நிர்வாகிகள் பலர் எடப்பாடி பழனிசாமிக்கு பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தார்கள். அதன்பிறகு கட்சி நிர்வாகிகள் மத்தியில் எடப்பாடி பழனிசாமி பேசும்போது கூறியதாவது:-
வீழ்த்த முடியாது
சுப்ரீம் கோர்ட்டு கொடுத்த தீர்ப்பு நமக்கு கிடைத்த மாபெரும் வெற்றியாகும். இந்த இயக்கத்தை சிதைக்க, முடக்க நினைத்தவர்களின் முகத்திரை கிழிக்கப்பட்டு இருக்கிறது. அ.தி.மு.க.வை எம்.ஜி.ஆர். தோற்றுவித்து, ஜெயலலிதா கட்டி காப்பாற்றினார். இந்த 2 பெரும் தலைவர்களின் ஆசீர்வாதத்தால் அ.தி.மு.க. வீறுநடைபோட்டு கொண்டு இருக்கின்றது. எந்த கொம்பனாலும் அ.தி.மு.க.வை வீழ்த்த முடியாது.
கடந்த 7 மாதங்களாக வேண்டுமென்றே திட்டமிட்டு கட்சிக்கு சிறுமையை ஏற்படுத்தும் விதமாக சில பேர் சதி செய்தார்கள். அந்த சதியை முறியடித்து இருக்கிறோம். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளர் கே.எஸ்.தென்னரசு மாபெரும் வெற்றி பெறுவார். எனக்கு வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர்கள் பொன்னையன், கே.பி.முனுசாமி, கே.ஏ.செங்கோட்டையன், வேலுமணி, தங்கமணி, அக்ரி கிருஷ்ணமூர்த்தி, கோகுலஇந்திரா, திண்டுக்கல் சீனிவாசன், கே.சி.கருப்பணன், கே.வி.ராமலிங்கம், சி.வி.சண்முகம் உள்பட பலர் கலந்துகொண்டனர்.