கட்சியின் பொதுக்குழு கூடி முடிவு எடுக்கும் அ.தி.மு.க. நிரந்தர பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்படுவார்; ஈரோட்டில் முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி பேட்டி
அ.தி.மு.க. நிரந்தர பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை தேர்வு செய்வது குறித்து கட்சியின் பொதுக்குழு முடிவு செய்யும் என்று முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி கூறினார்.
அ.தி.மு.க. நிரந்தர பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை தேர்வு செய்வது குறித்து கட்சியின் பொதுக்குழு முடிவு செய்யும் என்று முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி கூறினார்.
வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பு
அ.தி.மு.க. சார்பில் ஜூலை 11-ந்தேதி நடந்த பொதுக்குழு செல்லும். இடைக்கால் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டது செல்லும் என்று சுப்ரீம் கோர்ட்டு நேற்று தீர்ப்பு வழங்கியது. இதைத்தொடர்ந்து அ.தி.மு.க.வினர் நேற்று பல்வேறு இடங்களில் பட்டாசு வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கியும் கொண்டாடினர். அதன்படி ஈரோடு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் ஈரோடு அரசு ஆஸ்பத்திரி அருகில் அமைக்கப்பட்டு உள்ள தேர்தல் பணிமனை முன்பு பட்டாசு வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கியும் அ.தி.மு.க.வினர் கொண்டாடினர்.
அதைத்தொடர்ந்து தேர்தல் பணிமனையில் முன்னாள் அமைச்சரும், அ.தி.மு.க. துணை பொதுச்செயலாளருமான கே.பி.முனுசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
சுப்ரீம் கோர்ட்டு ஒரு வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பு வழங்கி உள்ளது. எம்.ஜி.ஆரால் தொடங்கப்பட்டு, ஜெயலலிதாவால் உருவாக்கப்பட்ட அ.தி.மு.க.வை அழிக்க வேண்டும், ஒழிக்க வேண்டும் என்று பலர் முயன்றனர். ஆனால் சுப்ரீம் கோர்ட்டு கடந்த ஆண்டு ஜூலை மாதம் 11-ந்தேதி நடைபெற்ற பொதுக்குழு செல்லும் என தீர்ப்பளித்து உள்ளது. சிலர் தர்மயுத்தம் நடத்துகிறேன் என்கிறார்கள். ஆனால் உண்மையில் இந்த தீர்ப்பின் மூலம் தர்மம் மீண்டும் வென்றுள்ளது.
ஓ.பன்னீர்செல்வத்திற்கு இடம் இல்லை
இந்த வெற்றிக்கு அயராது பாடுபட்ட பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கும், சட்டத்துறை செயலாளர் சி.வி.சண்முகம் சார்ந்த வக்கீல்கள் அனைவருக்கும் கோடான கோடி தொண்டர்கள் சார்பில் நன்றியை தெரிவிக்கிறோம். எம்.ஜி.ஆர். ஏழை மக்களின் வாழ்வு வளம் பெற இந்த கட்சியை தொடங்கினார்.
அவரது வழியில் ஜெயலலிதா மக்களின் நலனுக்காக பல்வேறு திட்டங்களை உருவாக்கி செயல்படுத்தினார். அவரது அடிச்சுவட்டில் எடப்பாடி பழனிசாமி அ.தி.மு.க.வை காத்து மக்களின் நலனுக்காக பாடுபடுவார். சுப்ரீம் கோட்டு ஜூலை மாதம் 11-ந்தேதி நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் செல்லும் எனக் கூறி உள்ளது. அதில் கட்சிக்கு துரோகம் இழைத்த ஓ.பன்னீர்செல்வம் உள்பட பலரை நீக்கியதும் செல்லும் என்று உள்ளது. எனவே சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பளித்துவிட்ட பிறகு அவரை கட்சியில் சேர்ப்பதற்கு இடமில்லை.
நிரந்தர பொதுச்ெசயலாளர்
இந்த வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பு வந்துள்ள சமயத்தில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் கே.எஸ்.தென்னரசு ஒரு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார். தி.மு.க. தலைவரும், முதல் -அமைச்சருமான மு.க.ஸ்டாலின், காங்கிரஸ் கட்சி மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி ஆகியோர் கண்ணுக்கு எட்டிய தூரம் வரை எதிரிகளே இல்லை என்று கூறினார்கள்.
ஆனால் இன்று நிலைமை மாறி உள்ளது. கே.எஸ்.தென்னரசு மகத்தான வெற்றியை பெறுவார். எடப்பாடி பழனிசாமி நிரந்தர பொதுச்செயலாளர் ஆவது குறித்து கட்சியின் பொதுக்குழு கூடி முடிவு எடுக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
அப்போது அவருடன் முன்னாள் அமைச்சர்கள் கே.ஏ.செங்கோட்டையன், கே.வி.ராமலிங்கம், கே.சி.கருப்பணன், கோகுல இந்திரா, திண்டுக்கல் சீனிவாசன், அக்ரி கிருஷ்ணமூர்த்தி, காமராஜ், பொள்ளாச்சி ஜெயராமன், எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம், தங்கமணி, ஜெயலலிதா பேரவை மாவட்ட இணைச்செயலாளர் வீரக்குமார், பகுதி செயலாளர்கள் மனோகரன், கேசவமூர்த்தி, கோவிந்தராஜ், ஜெகதீஷ், பகுதி அவைத்தலைவர் மீன்ராஜா, த.மா.கா. இளைஞர் அணி மாநில தலைவர் யுவராஜா உட்பட பலர் இருந்தனர்.