தற்காலிக தேர்தல் பணிமனைகளை அரசியல் கட்சியினர் 6 மணிக்குள் அகற்ற வேண்டும்; தேர்தல் நடத்தும் அதிகாரி தகவல்
தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ள தேர்தல் பணிமனைகளை அரசியல் கட்சியினர் இன்று(சனிக்கிழமை) மாலை 6 மணிக்குள் அகற்றிக்கொள்ள வேண்டும் என்று தேர்தல் நடத்தும் அதிகாரி சிவக்குமார் தெரிவித்து உள்ளார்.
தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ள தேர்தல் பணிமனைகளை அரசியல் கட்சியினர் இன்று(சனிக்கிழமை) மாலை 6 மணிக்குள் அகற்றிக்கொள்ள வேண்டும் என்று தேர்தல் நடத்தும் அதிகாரி சிவக்குமார் தெரிவித்து உள்ளார்.தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ள தேர்தல் பணிமனைகளை அரசியல் கட்சியினர் இன்று(சனிக்கிழமை) மாலை 6 மணிக்குள் அகற்றிக்கொள்ள வேண்டும் என்று தேர்தல் நடத்தும் அதிகாரி சிவக்குமார் தெரிவித்து உள்ளார்.
3 கட்ட பயிற்சி
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் நாளை மறுநாள் (திங்கட்கிழமை) நடக்கிறது. இதுகுறித்து ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அதிகாரி சிவக்குமார் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தற்காலிகமாக அனுமதி வழங்கப்பட்டு உள்ள தேர்தல் பணிமனைகளை அரசியல் கட்சியினர் நாளை (அதாவது இன்று) மாலை 6 மணிக்குள் அகற்றிக்கொள்ள வேண்டும். அதன்பிறகு எந்த ஒரு தேர்தல் தொடர்பான பணிகளையும் மேற்கொள்ளக்கூடாது. இந்த தொகுதிக்கு சம்பந்தமில்லாத அரசியல் கட்சியினர், பிரதிநிதிகள் மாலையில் தொகுதியை விட்டு உடனடியாக வெளியேற வேண்டும். வேட்பாளர்கள் சுதந்திரமாகவும், நியாயமாகவும் வாக்களிக்க அனைத்து வசதிகளும் செய்யப்பட்டு உள்ளன. வாக்குச்சாவடியில் பணியாற்றும் தேர்தல் அலுவலர்களுக்கு ஏற்கனவே 3 கட்ட பயிற்சி அளிக்கப்பட்டு உள்ளது.
பரிசு பொருள்
வாக்குச்சாவடி மையங்களுக்கு அனைத்து பொருட்களும் அனுப்பும் பணியும் நடந்து வருகிறது. மேலும் வாகனங்களுக்கு ஜி.பி.எஸ். கருவி பொருத்தப்படுகிறது. தேர்தல் விதி மீறல்கள் தொடர்பாக நிலை கண்காணிப்பு குழுவினர் 24 மணி நேரமும் கண்காணித்து வருகிறார்கள். வாக்காளர்களுக்கு பணம், பரிசு பொருட்கள் கொடுப்பது தொடர்பாக ஆதாரத்துடன் புகார் தெரிவித்தால் நடவடிக்கை எடுக்கப்படும். ஏற்கனவே இது தொடர்பாக புகார் வந்தபோது சம்பவ இடத்திற்கு நிலை கண்காணிப்பு குழுவினர் சென்று விசாரணை நடத்தினர்.
தலைமை தேர்தல் ஆணையம் சார்பில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை அமைதியாக நடத்த பல்வேறு அறிவுரைகள் வழங்கப்பட்டு உள்ளன.
குக்கர் வினியோகம்
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் இதுவரை தேர்தல் விதிமீறல் தொடர்பாக 725-க்கும் மேற்பட்ட புகார்கள் பெறப்பட்டுள்ளன. இதில் போலீஸ் தரப்பில் 75 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. பறக்கும் படைகள் சார்பில் 41 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன. வாக்காளர்களுக்கு குக்கர் வழங்கியது தொடர்பாக ஏற்கனவே 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இது தொடர்பாக புகார் வந்தபோது சம்பந்தப்பட்ட இடத்திற்கு பறக்கும் படையினர் சென்று விசாரித்தனர். அப்போது அந்த பகுதி பொதுமக்கள் நாங்கள் குக்கரை சொந்த பணத்தில் வாங்கியதாக கூறினார்கள்.
இடைத்தேர்தலில் பதற்றமான வாக்குச்சாவடிகளில் கூடுதல் பாதுகாப்பு போடப்படுகிறது. அங்கு வெப் கேமராக்கள் பொருத்தப்படுகிறது. ஒரே இடத்தில் 6 வாக்குச்சாவடிகள் இருந்தால், பதற்றமான வாக்குச்சாவடியாக குறிப்பிடப்பட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. அ.தி.மு.க. சார்பில் இதுவரை 13 புகார்கள் கொடுக்கப்பட்டு உள்ளன. அதற்கான உரிய விளக்கம் அளிக்கப்பட்டு உள்ளது.
தேர்தல் பணியில் ஈடுபட்ட 12 பேர் அலட்சியமாக பணியாற்றியதாக நோட்டீசு கொடுத்து உள்ளோம். நாம் தமிழர் கட்சியின் பிரசாரத்திற்கு தடை எதுவும் விதிக்கவில்லை. வேட்பாளர்களின் செலவு தொடர்பாக அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகிறார்கள்.
சாமியானா பந்தல்
பணப்பட்டுவாடா தொடர்பான புகார்கள் வந்தால் உடனுக்குடன் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தி வருகிறார்கள். இடைத்தேர்தலுக்காக அமைக்கப்பட்ட வாக்குச்சாவடிகளில் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. வெயில் அதிகமாக இருந்தால் வாக்காளர்களுக்கு சாமியானா பந்தல் அமைத்து கொடுக்கப்படும். அரசியல் கட்சி பிரமுகர்கள் தேவையென்றால் சிறிய அளவில் சாமியானா பந்தல் அமைத்து கொள்ளலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.