முட்டைகோஸ் கொள்முதல் விலை வீழ்ச்சி


முட்டைகோஸ் கொள்முதல் விலை வீழ்ச்சி
x
தினத்தந்தி 31 May 2023 4:00 AM IST (Updated: 31 May 2023 4:00 AM IST)
t-max-icont-min-icon

முட்டைகோஸ் கொள்முதல் விலை வீழ்ச்சி அடைந்து உள்ளது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

நீலகிரி

கோத்தகிரி

முட்டைகோஸ் கொள்முதல் விலை வீழ்ச்சி அடைந்து உள்ளது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

காய்கறி சாகுபடி

நீலகிரி மாவட்டத்தில் தேயிலை விவசாயம் பிரதானமாக உள்ளது. அதற்கு அடுத்தபடியாக கேரட், பீட்ரூட், உருளைக்கிழங்கு, முட்டைகோஸ், மேரக்காய், பீன்ஸ், காலிபிளவர் உள்ளிட்ட மலைக்காய்கறிகள் மற்றும் இங்கிலீஷ் காய்கறிகள் அதிகளவில் சாகுபடி செய்யப்படுகிறது. இவ்வாறு விளைவிக்கப்படும் காய்கறிகளை விவசாயிகள் அறுவடை செய்து, விற்பனைக்காக உள்ளூர் மற்றும் மேட்டுப்பாளையம் காய்கறி மண்டிகளில் விற்பனை செய்து வருகின்றனர்.

அங்கிருந்து மாநிலத்தின் பிறபகுதிகள் மற்றும் வெளி மாநிலங்களுக்கு விற்பனைக்காக அனுப்பப்பட்டு வருகிறது. கோத்தகிரி அருகே ஈளாடா, கதவுத்தொரை, கட்டபெட்டு, குடுமனை, காக்காசோலை, குருக்குத்தி, நெடுகுளா உள்ளிட்ட பகுதிகளில் முட்டைகோஸ் அதிகளவில் பயிரிடப்பட்டு உள்ளது. அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக போதுமான மழை பெய்து வருவதால் காய்கறி பயிர்கள் செழித்து வளர்ந்து வருகின்றன.

விலை வீழ்ச்சி

முட்டைகோஸ் பயிர்கள் வழக்கமாக 90 முதல் 100 நாட்களில் அறுவடைக்கு தயாராகி விடும். கடந்த சில மாதங்களுக்கு முன்பு முட்டைகோஸ் கிலோவுக்கு ரூ.25 வரை கொள்முதல் செய்யப்பட்டது. இந்த நிலையில் தற்போது முட்டைகோஸ் கிலோரூ.9-க்கு கொள்முதல் விலை கிடைத்து வருகிறது. விலை வீழ்ச்சியால் அதை பயிரிட்ட விவசாயிகள் நஷ்டம் அடைந்தனர். முட்டைகோசுக்கு போதுமான கொள்முதல் விலை கிடைக்காததால் விவசாயிகள் கவலையடைந்து உள்ளனர்.

இதுகுறித்து ஈளாடா கதவுத்தொரை கிராமத்தை சேர்ந்த விவசாயிகள் கூறும்போது, ஒரு கிலோ முட்டைகோஸ் விளைவிக்க ரூ.6 செலவாகிறது. அதை அறுவடை செய்து மேட்டுப்பாளையம் காய்கறி மண்டிகளுக்கு அனுப்ப போக்குவரத்து செலவு, அறுவடை செய்ய தொழிலாளர்கள் கூலி ஆகியவற்றை கணக்கிட்டால் விவசாயிகளுக்கு லாபம் கிடைப்பதில்லை. எனவே, நேரடியாக தோட்டங்களுக்கே வந்து கொள்முதல் செய்து, அறுவடையும் செய்து வரும் தனியார் நிறுவனங்களுக்கு முட்டைகோசை கிலோ ரூ.8-க்கு விற்பனை செய்து வருகிறோம். இதனால் போக்குவரத்து செலவு, தொழிலாளர் சம்பளம் மீதமாகிறது என்றனர்.


Next Story