தூத்துக்குடியில்மின்கம்பங்களில் கட்டப்பட்ட கேபிள் டி.வி. ஒயர்கள் அகற்றம்


தூத்துக்குடியில்மின்கம்பங்களில் கட்டப்பட்ட கேபிள் டி.வி. ஒயர்கள் அகற்றம்
x
தினத்தந்தி 12 Jan 2023 12:15 AM IST (Updated: 12 Jan 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடியில்மின்கம்பங்களில் கட்டப்பட்ட கேபிள் டி.வி. ஒயர்கள் அகற்றி மின்வாரிய அதிகாரிகள் அதிரடியாக நடவடிக்கை எடுத்தனர்.

தூத்துக்குடி

தூத்துக்குடியில் மின் கம்பங்களில் கட்டப்பட்டு இருந்த கேபிள் டி.வி. ஒயர்களை மின்வாரிய அதிகாரிகள் அதிரடியாக அகற்றினர்.

இடையூறு

தூத்துக்குடி நகரில் உள்ள மின் கம்பங்களில் கேபிள் டி.வி ஒயர்கள், தனியார் இணையதள சேவை கேபிள்கள் கட்டுப்பட்டு இருந்தன. இதனால் பல்வேறு விபத்துக்கள் ஏற்படுவதுடன், மின்வாரிய ஊழியர்கள் பராமரிப்பு மற்றும் பழுதுநீக்கம் செய்யும் பணிகளுக்கு இடையூறுகள் ஏற்பட்டு வந்தன. எனவே, மின் கம்பங்களில் கட்டப்பட்டுள்ள கேபிள் டி.வி ஒயர்கள், இணையதள கேபிள்களை அகற்ற வேண்டும் என மின்சார வாரியம் சார்பில் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது. இதைத் தொடர்ந்து தூத்துக்குடியில் கேபிள் டி.வி ஆபரேட்டர்கள், இணையதள சேவை நிறுவன பிரதிநிதிகளுக்கான கூட்டம் நடத்தப்பட்டு, மின்கம்பங்களில் கட்டப்பட்டு உள்ள ஒயர்களை அகற்ற அறிவுறுத்தப்பட்டது. ஆனால் எந்த ஒயர்களும் அகற்றப்படவில்லை. இதனால் மின்வாரியம் மூலமே கேபிள்கள் அகற்றப்படும் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டது.

அகற்றம்

நேற்று தூத்துக்குடி நகரில் உள்ள மின்கம்பங்களில் கட்டப்பட்டு இருந்த கேபிள் டி.வி ஒயர்கள், இணையதள கேபிள்களை அகற்றும் பணி நேற்று தொடங்கியது. தூத்துக்குடி நகர்ப்புற மின் விநியோக செயற்பொறியாளர் ராம்குமார் தலைமையில் உதவி இயக்குநர்கள் உமையொருபாகம், பிரேம், உதவி பொறியாளர்கள் பெருமாள், ரமேஷ், ராபர்ட், முருகன் மற்றும் மின்வாரிய ஊழியர்கள் 60 பேர் இந்த பணியில் ஈடுபட்டனர். அவர்கள் திருச்செந்தூர் ரோடு, தாமஸ் நகர், பனிமய நகர், தெற்கு காட்டன் சாலை, அன்னை தெரசா நகர், பாத்திமா நகர் பகுதிகளில் சுமார் 100 மின் கம்பங்களில் பொருத்தப்பட்டிருந்த கேபிள் டி.வி ஒயர்கள், தனியார் இணையதள கேபிள்களை துண்டித்து அகற்றினர்.

இதனால் ஒயர்கள் துண்டித்து அகற்றப்பட்ட பகுதிகளில் நேற்று கேபிள் டி.வி மற்றும் இணையதள சேவைகள் பாதிக்கப்பட்டன. மாற்றுவழிகளில் சேவைகளை வழங்க கேபிள் டி.வி ஆபரேட்டர்கள் மற்றும் இணையதள நிறுவனங்களை சேர்ந்தவர்கள் நடவடிக்கை மேற்கொண்டனர். சிலர் மின்வாரிய மின் கம்பங்களில் இருந்து அகற்றப்பட்ட கேபிள்களை மாநகராட்சி தெருவிளக்கு கம்பங்களில் கட்டி இணையதள சேவை தொடர்ந்து கிடைக்க ஏற்பாடு செய்தனர்.


Next Story