கேபிள் டி.வி. உரிமையாளர் வெட்டிக்கொலை


கேபிள் டி.வி. உரிமையாளர் வெட்டிக்கொலை
x

லால்குடி அருகே கேபிள் டி.வி. உரிமையாளரை வெட்டிக்கொன்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

திருச்சி

லால்குடி அருகே கேபிள் டி.வி. உரிமையாளரை வெட்டிக்கொன்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

கேபிள் டி.வி. உரிமையாளர்

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள நெருஞ்சலக்குடி வடக்கு தெருவை சேர்ந்தவர் தமிழரசன். இவரது மகன் மாதவன் (வயது 45). இவர் கேபிள் டி.வி. நடத்தி வந்தார். இவருக்கு மஞ்சுளா தேவி என்ற மனைவியும், ரிஷிவந்த் (17) என்ற மகனும், லித்திஸ்கா (11) என்ற மகளும் உள்ளனர். மஞ்சுளாதேவி லால்குடியில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.

நெருஞ்சலக்குடி கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோவில் கமிட்டியின் பொருளாளராக மாதவன் இருந்தார். இந்த நிலையில் கோவிலுக்கு சொந்தமான இடத்தை ஒருவர் ஆக்கிரமித்து இருந்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அதுமட்டுமின்றி கோவில் நிலத்தை ஆக்கிரமிப்பில் இருந்து மீட்பதில் மாதவன் தீவிரமாக இருந்துள்ளார்.

வெட்டிக்கொலை

இந்த நிலையில் நேற்று அதிகாலையில் மாதவன் நடைபயிற்சி சென்றார். அப்போது, மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் சிலர் திடீரென்று மாதவனை சரமாரியாக அரிவாளால் வெட்டினர். இதில் பலத்த காயம் அடைந்த மாதவன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். பின்னர் மர்ம நபர்கள் மோட்டார் சைக்கிளில் ஏறி தப்பி சென்றனர்.

இது குறித்து தகவல் அறிந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுஜித்குமார், லால்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு சீதாராமன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மோப்பநாய் லீலி சம்பவ இடத்தை மோப்பம் பிடித்து விட்டு திருச்சி-லால்குடி மெயின் ரோடு வரை சென்று நின்று விட்டது. ஆனால் யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. தடயவியல் நிபுணர்கள் சம்பவ இடத்தில் உள்ள முக்கிய தடயங்களை சேகரித்தனர்.

இது குறித்து லால்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து மாதவனை வெட்டிக்கொன்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

காரணம் என்ன?

கோவில் நிலம் ஆக்கிரமிப்பை மீட்பதில் மாதவன் தீவிரமாக இருந்ததால், அதன் காரணமாக வெட்டி கொலை செய்யப்பட்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் கொலையாளிகளை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.


Next Story