மானியத்தில் மதிப்புக்கூட்டும் எந்திர சேவை மையம் அமைக்க விவசாயகளுக்கு அழைப்பு


மானியத்தில் மதிப்புக்கூட்டும் எந்திர சேவை மையம் அமைக்க விவசாயகளுக்கு அழைப்பு
x

திருப்பத்தூர் மாவட்டத்தில் மானியத்தில் மதிப்புக்கூட்டும் எந்திர சேவை மையம் அமைக்க விவசாய குழுக்களுக்கு கலெக்டர் அமர்குஷ்வாஹா அழைப்பு விடுத்துள்ளார்.

திருப்பத்தூர்

திருப்பத்தூர்

திருப்பத்தூர் மாவட்டத்தில் மானியத்தில் மதிப்புக்கூட்டும் எந்திர சேவை மையம் அமைக்க விவசாய குழுக்களுக்கு கலெக்டர் அமர்குஷ்வாஹா அழைப்பு விடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

மதிப்புக்கூட்டும் எந்திர சேவை மையம்

தமிழக அரசு வேளாண் பொறியியல் துறையின் மூலம், தேசிய வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் மதிப்புக்கூட்டும் எந்திர சேவை மையங்கள் மானியத்தில் அமைக்கும் திட்டத்தினை செயல்படுத்தி வருகிறது.

விவசாயிகள் தங்கள் பகுதிகளில் விளையும் விளை பொருட்களை, தங்கள் பகுதிகளிலேயே மதிப்புக்கூட்டி, அதிக விலைக்கு விற்று லாபம் பெற்றிட மதிப்புக்கூட்டும் எந்திர சேவை மையங்கள் விவசாய குழுக்கள் அல்லது உழவர் உற்பத்தியாளர் அமைப்புகள் மூலம் அமைக்கப்படுகின்றன.

வேளாண் விளை பொருட்களை மதிப்புக்கூட்டும் எந்திரங்களான சிறிய பருப்பு உடைக்கும் எந்திரம், தானியம் அரைக்கும் எந்திரம், மாவரைக்கும் எந்திரம், கால்நடை தீவனம் அரைக்கும் எந்திரம், சிறிய வகை நெல் அரவை எந்திரம், நெல் உமி நீக்கும் எந்திரம், கேழ்வரகு சுத்தப்படுத்தி கல் நீக்கும் எந்திரம், தேங்காய் மட்டை உரித்தெடுக்கும் எந்திரம் உள்பட பல்வேறு எந்திரங்கள் எவ்வளவு எண்ணிக்கையில் தேவையோ அவற்றினை மொத்தம் ரூ.10 லட்சம் மதிப்பில் வாங்கி, மதிப்புக்கூட்டும் எந்திர சேவை மையங்கள் அமைத்திட 50 சதவீத மானியம் அதிகபட்சமாக ரூ.5 லட்சம் வரை பின்னேற்பு மானியமாக வழங்கப்படுகிறது.

40 சதவீத மானியத்தில்...

மேற்குறிப்பிட்டுள்ள மதிப்புக்கூட்டு எந்திரங்களை வாங்க விரும்பும் தனிநபர் விவசாயிகளுக்கு 40 சதவீதம் மானியத்தில் எந்திரங்கள் வழங்கப்படுகிறது.

மேற்காணும் இருதிட்டங்களுக்கு ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின விவசாய குழுக்களுக்கு மற்றும் தனி நபர் விவசாயிகளுக்கு கூடுதலாக 20 சதவீதம் மானியம் வழங்கப்படுகிறது. மேலும் விவசாயிகள் அமைக்கும் புதிய ஆழ்துளை கிணறுகளுக்கு புதிய மின் மோட்டார் வாங்கி பொருத்த அதிகபட்ச மானியமாக ரூ.10 ஆயிரம் வழங்கப்படுகிறது.

பழைய ஆழ்துளை கிணறுகள் மற்றும் திறந்த வெளி கிணறுகளில் உள்ள திறன் குறைந்த மின்மோட்டார் மாற்றி திறன் மிகுந்த புதிய பம்புசெட்டுகள் அமைக்கவும் அதிபட்ச மானியமாக ரூ.10 ஆயிரம் வழங்கப்படுகிறது.

மானிய விலையில் மதிப்புக்கூட்டும் எந்திர சேவை மையங்கள் அமைக்க விருப்பமுள்ள விவசாய குழுக்கள் மற்றும் உழவர் உற்பத்தியாளர் அமைப்புகள் மற்றும் தனி நபர் விவசாயிகள் மதிப்புக்கூட்டும் எந்திரங்கள் பெற அருகிலுள்ள உபகோட்ட உதவி செயற் பொறியாளர், வேளாண்மை பொறியியல் துறை அல்லது மாவட்ட அளவில் செயற் பொறியாளர், வேளாண்மை பொறியியல் துறை அலுவலகத்தை அணுகலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story