வாகனம் நிறுத்தும் இடத்தில் செயல்படாத கேமரா
ராமேசுவரத்தில் கோவிலுக்கு சொந்தமான வாகனம் நிறுத்தும் இடத்தில் செயல்படாத கேமராக்களால் பாதுகாப்பு கேள்விக்குறியாகும் அபாய நிலை ஏற்பட்டு உள்ளது.
ராமேசுவரம்,
ராமேசுவரத்தில் கோவிலுக்கு சொந்தமான வாகனம் நிறுத்தும் இடத்தில் செயல்படாத கேமராக்களால் பாதுகாப்பு கேள்விக்குறியாகும் அபாய நிலை ஏற்பட்டு உள்ளது.
வாகனங்கள் நிறுத்தும் இடம்
அகில இந்திய புண்ணிய தலங்களில் ஒன்றாக கருதப்படும் ராமேசுவரம் ராமநாதசாமி கோவிலுக்கு தமிழகம் மட்டுமல்லாமல் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். அதுபோல் ராமேசுவரத்திற்கு பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் வரக்கூடிய கார், வேன் உள்ளிட்ட வாகனங்கள் ஜே. ஜே.நகரில் உள்ள கோவிலுக்கு சொந்தமான வாகன நிறுத்துமிடத்தில் அதிகமாகவே நிறுத்தப்பட்டு வருகின்றன. இதை தவிர அதே பகுதியில் உள்ள நகராட்சி வாகன நிறுத்துமிடம் அக்னி தீர்த்த கடற்கரை சாலை உள்ளிட்ட இடங்களிலும் வாகனங்கள் நிறுத்தப்படுகின்றன.
ராமேசுவரம் ராமநாதசாமி கோவிலுக்கு சொந்தமான ஜே.ஜே நகரில் உள்ள வாகனம் நிறுத்தும் இடத்தில் சராசரியாக ஒரு நாளைக்கு 500 வாகனங்கள் வரை நிறுத்தப்பட்டு வருகின்றன. குறிப்பாக விடுமுறை நாட்களில் இதைவிட அதிகமான வாகனங்கள் இந்த வாகன நிறுத்துமிடத்தில் நிறுத்தப்படுகின்றன.இவ்வாறு வரும் வாகனம் ஒன்றுக்கு கோவில் நிர்வாகம் மூலம் ரூ.20 கட்டணமும் நிர்ணயம் செய்யப்பட்டு வசூலிக்கப்பட்டு வருகின்றது.
செயல்படாத கேமரா
இவ்வளவு அதிகமான வாகனங்கள் வந்து நிறுத்தப்பட்டு வரும் நிலையில் இந்த வாகன நிறுத்துமிடத்தில் பக்தர்களுக்கு தேவையான எந்த ஒரு அடிப்படை வசதிகளும் இல்லை என்று கூறப்படுகிறது. குறிப்பாக இங்கு வரக்கூடிய வாகனங்கள் மற்றும் பக்தர்களை கண்காணிக்கும் வகையில் வாகன நிறுத்தும் இடத்தின் நுழைவுப் பகுதி உள்ளிட்ட ஒரு சில இடங்களில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்கள் எதுவும் செயல்படாமல் வெறும் காட்சி பொருளாகவே காணப்படுகின்றன.
இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் பல நபர்கள் வந்து செல்லக்கூடிய மிக முக்கிய பகுதியாக இருந்தும் இந்த வாகன நிறுத்துமிடத்தில் பழுதாகி கிடக்கும் இந்த கண்காணிப்பு கேமராவை சரி செய்ய நடவடிக்கை எடுக்கவில்லை. இது மட்டுமல்லாமல் இந்த வாகனம் நிறுத்தும் இடத்தில் உள்ள சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் நிலையமும் செயல்படாமல் தண்ணீர் வராமல் காட்சி பொருளாகவே இருந்து வருகின்றது. மேலும் இங்கு உள்ள ஆண் மற்றும் பெண் கழிப்பறை வசதிகளும் பெரும்பாலான நாட்களில் தண்ணீர் வருவது கிடையாது. இதனால் வெளியூர், வெளிமாநில பக்தர்கள் இயற்கை உபாதை கழிக்க முடியாமல் மிகவும் அவதிப்படுகிறார்கள்.
கேமரா பொருத்த வேண்டும்
கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு கூட இதே வாகன நிறுத்தும் இடத்தில் 150 கிலோ கஞ்சாவுடன் வந்து காரை நிறுத்திவிட்டு கடத்தல்காரர்கள் தப்பி சென்று விட்டனர். ஆனால் வாகன நிறுத்துமிடம் இடத்தில் இருந்த கண்காணிப்பு கேமரா செயல்படாததால் அந்த காரில் வந்த நபர்கள் யார்? என இன்று வரையிலும் தெரியவில்லை. ஆகவே இது குறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உடனடியாக காவல்துறை மூலம் அல்லது கோவில் நிர்வாகம் மூலம் இந்த வாகனம் நிறுத்தும் இடத்தில் புதிதாக கண்காணிப்பு கேமராக்களை பல இடங்களில் பொருத்தி அனைத்து வாகனங்களையும் கண்காணித்து அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.