ஸ்டூடியோக்களில் பூட்டை உடைத்து கேமராக்கள் திருட்டு
திண்டுக்கல் புறநகர் பகுதியில் ஸ்டூடியோக்களில் பூட்டை உடைத்து கேமராக்களை மர்ம ஆசாமிகள் திருடி சென்றனர்.
திண்டுக்கல் அருகே உள்ள சீலப்பாடியை சேர்ந்தவர் கிறிஸ்டோபர் (வயது 39). இவர், திண்டுக்கல்லில் பழைய கரூர் ரோட்டில் உள்ள பெஸ்கி கல்லூரி அருகே ஸ்டூடியோ வைத்து நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவு இவர், வழக்கம் போல கடையை பூட்டி விட்டு சென்று விட்டார். இந்தநிலையில் நேற்று காலை அவர், ஸ்டூடியோவுக்கு வந்தார். அப்போது ஷட்டரின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. உள்ளே சென்று பார்த்தபோது அங்கிருந்த கேமரா திருட்டு போய் இருந்ததை கண்டு கிறிஸ்டோபா் அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து தாடிக்கொம்பு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
இதேபோல் திண்டுக்கல் அருகே உள்ள பாலகிருஷ்ணாபுரம் கோவிந்தராஜ் நகரை சேர்ந்த ஜஸ்டின் பால்ராஜ் (42) என்பவர், திண்டுக்கல்லில் திருச்சி சாலையில் உள்ள காந்திஜி நகரில் ஸ்டூடியோ நடத்தி வருகிறார். இந்த ஸ்டூடியோவிலும் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் ேகமராவை திருடி சென்று விட்டனர். இதனால் அதிர்ச்சி அடைந்த ஜஸ்டின் பால்ராஜ், இதுதொடர்பாக திண்டுக்கல் தாலுகா போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
அதன்பேரில் போலீசார் 2 ஸ்டூடியோக்களுக்கும் சென்று விசாரணை நடத்தினர். மேலும் சம்பவ இடத்துக்கு கைரேகை நிபுணர்கள் மற்றும் தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்களை சேகரித்தனர். மேலும் ஸ்டூடியோக்களின் முன்பு பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களை போலீசார் ஆய்வு செய்து மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். திருடப்பட்ட கேமராக்களின் மதிப்பு ரூ.1 லட்சம் இருக்கும் என்று கருதப்படுகிறது. இந்த 2 ஸ்டூடியோக்களிலும் ஒரே நபர்கள் கைவரிசை காட்டியிருக்கலாம் என்ற கோணத்தில் போலீஸ் விசாரணை முடுக்கி விடப்பட்டுள்ளது.