பல்துறை பணி விளக்க முகாம்
பல்துறை பணி விளக்க முகாம் நடைபெற்றது.
சாயல்குடி,
கடலாடி வட்டாரத்தில் வேளாண்மை உழவர் நலத்துறை சார்பில் பல்துறை பணி விளக்க முகாம் நடைபெற்றது. முகாமிற்கு கடலாடி வேளாண்மை உதவி இயக்குனர் சுந்தர வள்ளி தலைமை தாங்கினார். அதேபோல கடலாடி வட்டத்தில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் பல்துறை பணி விளக்க முகாம் ஆப்பனூர் கண்டிலான், மாரியூர், நரிப்பையூர், கன்னிராஜபுரம், சிறைக்குளம், மேலச்செல்வனூர், ஏர்வாடி ஆகிய ஊராட்சிகளில் நடைபெற்றது. நரிப்பையூர் கிராமத்தில் நடைபெற்ற முகாமிற்கு வேளாண் துணை இயக்குனர் பாஸ்கர மணியன் தலைமை தாங்கினார். முகாமில் பட்டா மாறுதல், விவசாய கடன் அட்டை வழங்குவதற்கான விண்ணப்பங்கள், விவசாய நிலங்களுக்கு வண்டல் மண் எடுப்பதற்கான அனுமதி விண்ணப்பங்கள் பெறப்பட்டன. மேலும் முகாமில் பிரதமரின் கவுரவ நிதி பெறுவதற்கு தகுதியுள்ள விவசாயிகள் பதிவு செய்து பயன் அடையலாம் என்ற விவரமும் தெரிவிக்கப்பட்டது. கிராம வளர்ச்சிக்கான ஊரக வளர்ச்சித்துறையின் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்தும் எடுத்து கூறப்பட்டது. முகாமில் வேளாண் துறையுடன், வேளாண் வணிகத்துறை, தோட்டக்கலை துறை, வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்களும், உள்ளாட்சி பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர். தொடர்ந்து பயனாளிகளுக்கு மானிய விலையில் தார்ப்பாய்கள், மருந்தடிக்கும் கைத்தெளிப்பான், விசை தெளிப்பான்கள், மண்புழுஉரம், வீட்டுத் தோட்டம் அமைப்பதற்கான காய்கறி விதைகள் வழங்கப்பட்டது.