இலவச வெறிநாய்கடி தடுப்பூசி முகாம்
பரமத்தியில் இலவச வெறிநாய்கடி தடுப்பூசி முகாம் நடந்தது.
பரமத்திவேலூர்
பரமத்திவேலூர் தாலுகா, பரமத்தி பேரூராட்சி சமுதாய கூடத்தில் தமிழ்நாடு அரசு கால்நடை பராமரிப்பு துறையின் மூலம் தேசிய வேளாண் அபிவிருத்தி திட்டம் ராஷ்ட்ரிய கிருஷி விகாஷ் யோஜனா 2021-22-ம் ஆண்டு திட்டத்தின் கீழ் இலவச வெறிநாய்கடி தடுப்பூசி முகாம் நடைபெற்றது. முகாமில் 100-க்கும் மேற்பட்ட நாய்களுக்கு வெறிநாய் தடுப்பூசி இலவசமாக செலுத்தப்பட்டது. அதனைத்தொடர்ந்து பரமத்தி ஊராட்சி ஒன்றிய அளவிலான வெறி நோயினை தடுப்பது மற்றும் கட்டுப்படுத்துவதற்கான விழிப்புணர்வு முகாம் மற்றும் பயிலரங்கம் நடைபெற்றது. விழிப்புணர்வு பயிலரங்க முகாமிற்கு திருச்செங்கோடு கோட்ட கால்நடை பராமரிப்புத்துறை உதவி இயக்குனர் மருத்துவர் அருண் பாலாஜி தலைமை தாங்கி, வெறிநாய்கடியின் முக்கியத்துவம், நோய் பரவும் முறை, நோயால் ஏற்படும் பாதிப்புகள் மற்றும் நோய் பரவாமல் தடுப்பதற்கான வழிமுறைகள் குறித்து விரிவாக எடுத்துக்கூறினார். இதற்கான ஏற்பாடுகளை பரமத்தி ஒன்றிய கால்நடை உதவி மருத்துவர்கள், கால்நடை ஆய்வாளர் மற்றும் கால்நடை பராமரிப்பு உதவியாளர்கள் செய்திருந்தனர்.