விண்ணப்பம் பெறுவதற்கான முகாம்24-ந் தேதி தொடங்க வாய்ப்பு; வருவாய் துறை அதிகாரிகள் தகவல்


விண்ணப்பம் பெறுவதற்கான முகாம்24-ந் தேதி தொடங்க வாய்ப்பு; வருவாய் துறை அதிகாரிகள் தகவல்
x

மகளிர் உரிமைத்தொகை விண்ணப்பம் பெறுவதற்கான முகாம் வருகிற 24-ந் தேதி தொடங்க வாய்ப்புள்ளதாக வருவாய் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஈரோடு

மகளிர் உரிமைத்தொகை விண்ணப்பம் பெறுவதற்கான முகாம் வருகிற 24-ந் தேதி தொடங்க வாய்ப்புள்ளதாக வருவாய் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

உரிமைத்தொகை

தி.மு.க. தேர்தல் அறிக்கையில் கூறியபடி, மகளிருக்கு உரிமைத்தொகை ரூ.1,000 வழங்கும் திட்டம் வருகிற செப்டம்பர் மாதம் தொடங்கப்படும் என்று தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதற்கான பணிகள் ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட கலெக்டர் தலைமையில் நடைபெற்று வருகிறது. இதுகுறித்து வருவாய் துறை அதிகாரிகள் கூறியதாவது:-

மகளிருக்கு மாதம் ரூ.1,000 உரிமைத்தொகை வழங்கும் திட்டம் வருகிற செப்டம்பர் மாதம் 15-ந்தேதி தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு பயனாளிகளை தேர்வு செய்ய ரேஷன் கார்டுதாரர்கள் விண்ணப்பம் அளிக்க முகாம் நடத்தப்படுகிறது. 3 கட்டமாக இந்த முகாம்கள் நடைபெறவுள்ளது. முதல்கட்ட முகாம் வருகிற 24-ந் தேதி தொடங்கி ஆகஸ்டு மாதம் 4-ந்தேதி வரை நடைபெற வாய்ப்புள்ளது.

குடும்ப தலைவிகள்

ஈரோடு மாவட்டத்தில் 7 லட்சத்து 67 ஆயிரத்து 448 ரேஷன் கார்டுகளும், 1,202 ரேஷன் கடைகளும் உள்ளன. மகளிர் உரிமைத்தொகை பெற ரூ.2 லட்சத்து 50 ஆயிரத்துக்குள் குடும்ப ஆண்டு வருமானம், 5 ஏக்கருக்கு மேல் நிலம் இருக்கக்கூடாது, முதியோர் ஓய்வூதியம் உள்ளிட்ட அரசின் பிற உதவிகளை பெறாதவராக இருக்க வேண்டும் உள்ளிட்ட நிபந்தனைகள் பூர்த்தியாகும் குடும்ப தலைவிகளுக்கு மட்டும் இந்த உதவித்தொகை வழங்கப்படும் என அரசு அறிவித்துள்ளது.

இதற்காக குடும்ப தலைவிகளிடம் விண்ணப்பம்பெற முகாம்கள் நடத்தப்பட உள்ளது. அதற்கான முறையான அறிவிப்பை அரசு வெளியிடும். அதன்பிறகு ரேஷன் கடையின் அருகில் உள்ள பொது இடத்தில் முகாம் நடைபெறும்.

பரிசீலனை

தினமும் 84 பேரிடம் மனுக்கள் பெறப்பட்டு, செல்போன் செயலியில் பதிவேற்றம் செய்யப்படும். இதற்காக ஈரோடு மாவட்டத்தில் இல்லம்தேடி கல்வி திட்ட தன்னார்வலர்கள் 2 ஆயிரத்து 238 பேருக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. முகாம் தேதி அறிவிக்கப்பட்ட உடன் ரேஷன் கார்டுதாரர்களுக்கு, ரேஷன் கடை மூலம் விண்ணப்பம் அளிக்கப்படும். விண்ணப்பத்திலேயே டோக்கன் வரிசை எண், விண்ணப்பம் அளிக்க வர வேண்டிய தேதி உள்ளிட்ட விவரங்கள் இருக்கும்.

ஆதார் எண் பதிவு செய்தாலே வருமானம், சொத்து, முதியோர் உதவித்தொகை உள்ளிட்ட வேறு ஏதேனும் அரசு உதவியை பெறுபவரா என்பன உள்ளிட்ட விவரங்கள் தெரியவரும். அதன் அடிப்படையில் தகுதியான விண்ணப்பங்கள் பரிசீலனை செய்யப்பட்டு உரிமைத்தொகை பெறுபவர்களின் பட்டியல் இறுதி செய்யப்படும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.


Next Story