2,401 பேருக்கு பணி நியமன ஆணை


2,401 பேருக்கு பணி நியமன ஆணை
x
திருப்பூர்


காங்கயத்தில் 201 நிறுவனங்கள் பங்கேற்ற தனியார் துறை வேலை வாய்ப்பு முகாமில் 2,401 பேருக்கு பணி நியமன ஆணையை 6 அமைச்சர்கள் வழங்கினர்.

வேலை வாய்ப்பு முகாம்

காங்கயத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது. இதனை அமைச்சர்கள் முத்துசாமி, மு.பெ.சாமிநாதன், சக்கரபாணி, செஞ்சி மஸ்தான், கணேசன், கயல்விழி ஆகியோர் தலைமை தாங்கி தொடங்கி வைத்தனர்.

வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை இயக்குனர் வீரராகவராவ், கலெக்டர் வினீத், செல்வராஜ் எம்.பி. முன்னிலை வகித்தனர்.

விழாவில் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் முத்துசாமி பேசும்போது, 'படித்த இளைஞர்களுக்கு தகுதியான வேலை வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுப்பதை இந்த அரசு முக்கிய குறிக்கோளாக கொண்டுள்ளது' என்றார்.

செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் பேசும்போது, 'அறிவுத்திறனால் அனைத்து மாணவர்களையும், இளைஞர்களையும் வளர்த்தெடுக்கக்கூடிய திட்டம் தான் நான் முதல்வன் திட்டம். வேலைவாய்ப்புகளை உருவாக்குவது அந்த வேலைக்கு தகுதியான இளைஞர்களை உருவாக்குவது என்கிற சக்கர சுழற்சியுடன் முதல்-அமைச்சர் செயல்பட்டு வருகிறார். இந்த வேலைவாய்ப்பு முகாமை பயன்படுத்தி இளைஞர்கள் உயர்ந்த இடத்தை அடைய வாழ்த்துக்கள்' என்றார்.

90,643 பேருக்கு வேலை

தொழிலாளர் நலன் துறை அமைச்சர் கணேசன் பேசும்போது, 'தனியார் துறை மூலம் வேலை வாய்ப்பு வழங்கும் வகையில் தமிழகத்தில் 62 இடங்களில் வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட்டு 90 ஆயிரத்து 643 பேருக்கு வேலை பெற்றுக்கொடுத்துள்ளோம். இந்த ஆண்டு ரூ.2,877 கோடி செலவில் தொழிற்பயிற்சி நிறுவனங்களை நவீன தொழில்நுட்பத்துடன் மேம்படுத்தியுள்ளோம்' என்றார்.

வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் பேசும்போது, 'வெளிநாடுகளில் வேலை வாங்கிக்கொடுப்பதாக கூறி தனியார் முகவர்களிடம் சிக்கி இளைஞர்கள் தவித்து வந்த நிலையை மாற்றி, அரசே அவர்களை பதிவு செய்து சட்ட திட்டங்களுடன் வேலைவாய்ப்பை கொடுக்கும் நிலையை முதல்-அமைச்சர் உருவாக்கியுள்ளார்' என்றார்.

உகந்த மாநிலம்

உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி பேசும்போது, 'பல்வேறு மாநிலங்கள் மற்றும் வெளிநாட்டு தொழில் நிறுவனங்கள் தமிழகத்துக்கு வந்து தொழில் செய்யும் வகையில் உகந்த மாநிலமாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உருவாக்கியுள்ளார். என்றார்.

ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி பேசும்போது, 'படித்து முடித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் அரசு துறை வேலைக்கு போட்டித்தேர்வுகளை எழுத வேண்டும். கடுமையாக உழைக்க வேண்டும். அரசு வேலைக்கு செல்ல காலதாமதம் ஏற்பட்டால் அந்த காலத்தில் தனியார் நிறுவனங்களில் வேலை செய்யும் வகையில் இந்த முகாம் நடத்தப்படுகிறது. என்றார்.

விழாவில் மேயர் தினேஷ்குமார், மாவட்ட வருவாய் அதிகாரி ஜெய்பீம், மாநகராட்சி 4-வது மண்டல தலைவர் இல.பத்மநாபன், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை மண்டல இணை இயக்குனர் ஞானசேகரன், வேலைவாய்ப்பு அலுவலர் சுரேஷ்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இந்த வேலை வாய்ப்பு முகாமில் 11 ஆயிரத்து 306 பேர் கலந்து கொண்டனர். இவர்களில், 2401 பேர் தேர்வு ஆனார்கள். இவர்களுக்கு பணி நியமன ஆணையை அமைச்சர்கள் வழங்கினர். 2-வது கட்ட தேர்வுக்கு 559 பேர் தகுதி பெற்றுள்ளனர். புதிதாக திறன் மேம்பாட்டு பயிற்சி பெற 260 பேர் தேர்வு பெற்றுள்ளனர். வெளிநாட்டு வேலைக்கு 187 பேர் தேர்வு பெற்றுள்ளனர்.


Next Story