வயலில் சாய்ந்துள்ள மின்கம்பம் அகற்றப்படுமா?


வயலில் சாய்ந்துள்ள மின்கம்பம் அகற்றப்படுமா?
x
தினத்தந்தி 20 Jun 2023 12:15 AM IST (Updated: 20 Jun 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

திருமருகல் பகுதியில் வயலில் சாய்ந்துள்ள மின்கம்பத்தை அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நாகப்பட்டினம்

திட்டச்சேரி:

திருமருகல் பகுதியில் வயலில் சாய்ந்துள்ள மின்கம்பத்தை அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சாய்ந்த மின்கம்பம்

திருமருகல் ஒன்றிய பகுதிகளில் கடந்த 6-ந்தேதி இடி, மின்னல், சூறைக்காற்றுடன் பலத்த மழை பெய்தது. இந்த மழையால் திட்டச்சேரி, திருமருகல், போலகம், இடையாத்தங்குடி, ஏனங்குடி, கருப்பூர், வடகரை, திருப்புகலூர், கணபதிபுரம், நெய்குப்பை, மருங்கூர் உள்ளிட்ட பகுதிகளில் மரங்கள் சாய்ந்து விழுந்து மின்கம்பிகள் அறுந்தும், மின்கம்பங்கள் சாய்ந்தும் சேதமடைந்தன.

இதனால் ஒன்றிய பகுதிகளில் முழுவதும் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு இருந்தது. சேதம் அடைந்த மின்கம்பிகள் மற்றும் மின்கம்பங்கள் சீரமைக்கப்பட்டு மின் இணைப்பு வழங்கப்பட்டது. ஆனால் பல இடங்களில் சாய்ந்து விழுந்த மின்கம்பங்கள் சீரமைக்கப்படாமலும், மின்கம்பிகள் முழுவதுமாக சீரமைக்காமலும் மிகவும் தாழ்வாக உள்ளன. ஒரு வயலில் மின்கம்பம் சாய்ந்த நிலையில் கம்பிகள் தாழ்வாக காணப்படுகிறது.

நடவடிக்கை

காற்று வேகமாக வீசும்போது மின்கம்பிகள் அறுந்து கால்நடைகள் உயிரிழக்கும் அபாயம் உள்ளது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் பலமுறை புகார் தெரிவித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் போா்க்கால அடிப்படையில் சேதமடைந்த மின்கம்பங்களை சீரமைப்பதுடன், தாழ்வாக செல்லும் மின்கம்பிகளை உயரத்தில் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story