வெல்லம் உற்பத்தியில் கலப்படம் தடுக்கப்படுமா?-விவசாயிகள் எதிர்பார்ப்பு
வெல்லம் உற்பத்தியில் கலப்படம் செய்வது தடுக்கப்படுமா? என்று விவசாயிகள் எதிர்பார்த்துள்ளனர்.
ஓமலூர்:
வெல்லம் உற்பத்தி
சேலம் மாவட்டத்தின் அடையாளமான தொழில்களில் ஒன்று வெல்லம் உற்பத்தி. மாவட்டத்தில் 220-க்கும் மேற்பட்ட வெல்லம் உற்பத்தி ஆலைகள் உள்ளன. குறிப்பாக ஓமலூர் அருகே உள்ள காமலாபுரம், காடையாம்பட்டி மற்றும் அதன் சுற்று வட்டாரத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட வெல்ல உற்பத்தி ஆலைகள் உள்ளன.
இதேபோல் எடப்பாடி, தேவூர் ஆகிய பகுதிகளில் சுமார் 50-க்கும் மேற்பட்ட ஆலைகள் உள்ளன. இந்த ஆலைகளில் தினமும் 130 டன் வரை குண்டுவெல்லம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.
இதற்காக ஓமலூர், காடையாம்பட்டி வட்டாரத்தில் காமலாபுரம், சர்க்கரை செட்டிப்பட்டி, வட்டக்காடு, நாலுகால் பாலம், சந்தப்பேட்டை, டேனிஸ்பேட்டை, எடப்பாடி, தேவூர் உள்ளிட்ட பகுதிகளில் கரும்பு விவசாயம் செய்யப்பட்டு வருகின்றன. மேலும் ஈரோடு, பழனி, தாராபுரம், கள்ளக்குறிச்சி, அரூர், பாப்பிரெட்டிப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் இருந்தும் வெல்லத்திற்காக கரும்பு கொள்முதல் செய்யப்படுகிறது.
கண்காணிப்பு கேமரா
இங்கு உற்பத்தி செய்யப்படும் வெல்லமானது தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன. இந்த நிலையில் உற்பத்தியாளர்கள் பலர் வெல்லத்தில் கலப்படம் செய்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால் தரமான வெல்லத்தை உற்பத்தி செய்பவர்களுக்கும் அவப்பெயர் ஏற்படும் நிலை உள்ளதாக வெல்ல உற்பத்தியாளர்கள் தெரிவிக்கின்றனர். அதேநேரத்தில் வெல்லத்தில் கலப்படம் செய்யப்படுவதை தடுக்க உணவு பாதுகாப்பு அதிகாரிகள் பல்வேறு ஆய்வுகள் மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் வெல்லத்தில் கலப்படம் செய்வதை தடுக்கும் வகையில் ஒவ்வொரு ஆலையிலும் கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும் என்று அதிகாரிகள் அறிவுறுத்தி வருகின்றனர். இதுவரை மாவட்டத்தில் 192 வெல்லம் உற்பத்தி ஆலைகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. ஆனால் அதையும் மீறி சில ஆலைகளில் வெல்லத்தில் கலப்படம் செய்து உற்பத்தி செய்யப்படுவதாக புகார்கள் வந்துள்ளதாக அதிகாரிகள் கூறுகின்றனர். வெல்லத்தில் கலப்படம் செய்வது தடுக்கப்படுமா? என்பது குறித்து விவசாயிகள் மற்றும் சிலர் கூறிய கருத்துக்கள் வருமாறு:-
வெள்ளை சர்க்கரை
விவசாயி மோகன்ராஜ் (காமலாபுரம்):-
காமலாபுரம் பகுதியில் எனது தந்தை காலம் முதல் விவசாயம் செய்து வருகிறோம். அப்போது ரசாயன உரங்களை பெயரளவுக்கு பயன்படுத்தி வந்தோம். இயற்கை உரங்களை தான் விவசாயிகள் அதிகளவு பயன்படுத்தி வருகின்றனர். ஆனால் தற்போது உணவு பொருட்கள் கெடாமல் இருப்பதற்காக பல்வேறு ரசாயனங்களை பயன்படுத்தி வருகின்றனர்.
குறிப்பாக பல ஆலைகளில் வெல்லத்தில் வெள்ளை சர்க்கரை கலப்படம் செயயப்படுகிறது. இது மிகவும் வேதனை அளிக்கிறது. கலப்படத்தால் வெல்லத்தின் உண்மையான ருசியே மாறிவிடுகிறது. மேலும் வெல்லத்தில் சில ரசாயனத்தை கலப்படம் செய்யப்படுவதால் பல்வேறு நோய் பரவும் வாய்ப்புள்ளது. கரும்பு வெல்ல உற்பத்தியில் வெள்ளை சர்க்கரை கலப்பதால் கரும்பு விவசாயிகள் பெரும் நஷ்டத்துக்கு உள்ளாகி ஆளாகி வருகின்றனர். எனவே வெல்லத்தில் கலப்படம் செய்வதை தடுக்க அரசு தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தீ வைத்து கொளுத்தும்...
விவசாயி தங்கதுரை (சர்க்கரை செட்டிப்பட்டி, தொப்பலங்காடு):-
காமலாபுரம், பொட்டியபுரம், சர்க்கரைசெட்டிபட்டி, வட்டக்காடு, தேக்கம்பட்டி, வெள்ளாளப்பட்டி ஆகிய பகுதிகளில் சில ஆண்டுகளுக்கு முன்பு வரை ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் கரும்பு விவசாயம் சிறப்பாக நடைபெற்றது. இந்த பகுதியில் விளைவிக்கப்பட்ட கரும்பு அதிக சுவை கொண்டதால் வெல்லத்திற்கு பெயர் பெற்றிருந்தது. ஆனால் தற்போது வெல்லத்தில் கரும்புக்கு பாதியாக வெள்ளை சர்க்கரையை கொட்டி வெல்லம் உற்பத்தி செய்யப்படுகிறது.
இதனால் நாள் ஒன்றுக்கு 5 முதல் 7 டன் வரை கரும்பு அறுவடை செய்யப்பட்ட நிலையில் தற்போது 2 முதல் 3 டன் வரை கரும்பு அறுவடை செய்யப்படுகிறது. உரிய காலத்தில் அறுவடை செய்யப்படாததால் கரும்பு காய்ந்து போகும் நிலை ஏற்படுகிறது. இதனால் மனவேதனை அடையும் விவசாயிகள் கரும்பினை தோட்டத்துடன் தீ வைத்து கொளுத்தும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். கரும்பு விவசாயிகளை காப்பாற்ற அரசு கரும்பு வெல்ல உற்பத்தியில் வெள்ளை சர்க்கரை கலப்படத்தை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ரசாயன உரங்கள்
வெல்ல உற்பத்தியாளர் முத்துக்குமார்(காட்டுவளவு) :-
ஓமலூர் மற்றும் காடையாம்பட்டி வட்டாரத்தில் உள்ள கரும்பு வெல்லம் உற்பத்தி செய்யும் ஆலைகளில் நேரடியாகவும் மறைமுகமாகவும் தினமும் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் வேலை வாய்ப்பு பெறுகின்றனர். தற்போது ஆலை கரும்பு டன் ரூ.2 ஆயிரம் வரை குத்தகைக்கு பிடித்து அறுவடை செய்து ஆலைகளுக்கு கொண்டு வந்து வெல்லம் உற்பத்தி செய்கிறோம். கரும்பு உற்பத்தியில் ரசாயன உரங்கள் அதிகளவில் பயன்படுத்தப்படுவதால் கரும்பு தரம் இல்லாத நிலை உள்ளது. அதனால் தரமான வெல்லம் கிடைப்பதில்லை. உணவு பாதுகாப்பு அலுவலர்கள் வெள்ளை சர்க்கரையை பயன்படுத்த கூடாது என கூறுவதால் தற்போது அதை பயன்படுத்துவதில்லை.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
46 டன் பறிமுதல்
சர்க்கரையில் கலப்படம் குறித்து சேலம் மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் கதிரவன் கூறியதாவது:-
சேலம் மாவட்டத்தில் 200-க்கும் அதிகமான வெல்லம் உற்பத்தி ஆலைகள் உள்ளன. தற்போது கண்களால் பார்த்து வெல்லம் கலப்படமா?, இல்லையா? என கண்டுபிடிப்பது மிகவும் கஷ்டமாகும். பலர் வெல்லத்தில் கலப்படம் செய்து வருகின்றனர். வெல்லம் தயாரிக்கும் போது ஹட்ரோஸ் மற்றும் சூப்பர் பாஸ்பேட் உள்ளிட்ட ரசாயனம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. கரும்பு பாலின் அசுத்தத்தை போக்குவதற்காக ஹட்ரோஸ் என்னும் ரசாயனம் பயன்படுத்தப்படுகிறது. வெல்லம் வெளிர் நிறமாக மாற்றுவதற்காக பிளீச்சிங் பவுடரும், இறுகும் தன்மைக்காக மைதாவும் கலக்கப்படுகிறது. குறிப்பாக வெல்லத்தில் வெள்ளை சர்க்கரை கலப்படம் செய்யப்படுகிறது.
இதற்காக சர்க்கரை கர்நாடக மாநிலத்தில் இருந்து வாங்கப்படுகிறது. கடந்த 1-ந் தேதி முதல் நேற்று வரை கலப்படத்துக்கு பயன்படுத்தப்பட்ட 46 டன் சர்க்கரை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக 10 ஆலைகள் மீதும், ஒரு சர்க்கரை மொத்த வியாபாரி மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கலப்படம் செய்தால் உணவு பாதுகாப்பு சட்டத்தின்படி சிறை தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. கலப்படத்தை உற்பத்தியாளர்கள் நினைத்தால் தான் முழுமையாக தடுக்க முடியும்.
இவ்வாறு அவர் கூறினார்.