ஏரிகளில் ஆக்கிரமிப்பு அகற்றப்படுமா?
பட்டுக்கோட்டை அருகே முதல்சேரி ஊராட்சியில் ஏரிகளில் ஆக்கிரமிப்பு அகற்றப்படுமா? என கிராம மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.
கரம்பயம்:
பட்டுக்கோட்டை அருகே முதல்சேரி ஊராட்சியில் ஏரிகளில் ஆக்கிரமிப்பு அகற்றப்படுமா? என கிராம மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.
ஏரிகள் ஆக்கிரமிப்பு
தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட முதல் சேரி ஊராட்சியில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான பெரிய ஏரி, பூலாங்கண்ணி ஏரி, தச்சன் ஏரி, புதுக்குளம் ஏரி ஆகிய 4 ஏரிகள் உள்ளன. இந்த பகுதி பொதுமக்களுக்கு இந்த ஏரிகள் மிகவும் பயன்படக்கூடிய வகையில் உள்ளன.
ஆனால் தற்போது பெரிய ஏரியில் 2 ஏக்கர், பூலாங்கண்ணி ஏரியில் 8 ஏக்கர், தச்சன் குளம் ஏரியில் 2 ஏக்கர், புதுக்குளம் ஏரியில் 3 ஏக்கர் என ஏரிகளில் 15 ஏக்கருக்கு மேல் பலர் ஆக்கிரமிப்புகள் செய்து அவற்றை விவசாய நிலங்களாக பயன்படுத்தி வருகிறார்கள்.
தண்ணீர் பஞ்சம் வராது
இதனால் மேற்கண்ட பெரிய ஏரி, பூலாங்கண்ணி ஏரி, தச்சன் ஏரி, புதுக்குளம் ஏரி ஆகிய 4 ஏரிகளும் பரப்பளவில் மிகவும் குறுகி விட்டது. இதனால் பொதுமக்கள் பயன்படுத்த முடியாமல் போகிறது. மேற்கண்ட 4 ஏரிகளும் மழைக்காலங்களில் தண்ணீர் நிரம்பி இருக்கும்போது முதல்சேரி, நைனா குளம், சிவக்கொல்லை உள்ளிட்ட அனைத்து பகுதிகளுக்கும் கோடை காலத்தில் தண்ணீர் பஞ்சம் வராது.
ஆடு, மாடுகள் போன்ற கால்நடைகளுக்கும் தட்டுப்பாடின்றி தண்ணீர் கிடைக்கும்.
ஊராட்சி மன்றத்தில் தீர்மானம்
இது பற்றி ஊராட்சி மன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி தஞ்சை மாவட்ட கலெக்டருக்கும், தாசில்தாருக்கும் மனு அனுப்பப்பட்டுள்ளது. இதே போன்று சட்ட பேரவை குழு வந்திருந்த போது அவர்களிடமும் மேற்கண்ட மனுவை ஊராட்சி மன்ற தலைவர் கொடுத்துள்ளார். ஆனால் இதுவரை எந்தவிதமான முயற்சியும் எடுக்காததால் மாவட்ட கலெக்டர் உடனடியாக உத்தரவிட்டு பொதுப்பணித்துறைக்கு சொந்தமான 4 ஏரிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, ஏரிகளை ஆழப்படுத்தி, அகலப்படுத்தி பொதுமக்கள் பயன்படுத்துவதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.