அவதூறான கருத்துகளை பரப்பலாமா? அண்ணாமலைக்கு கே.எஸ்.அழகிரி கண்டனம்


அவதூறான கருத்துகளை பரப்பலாமா?  அண்ணாமலைக்கு கே.எஸ்.அழகிரி கண்டனம்
x

நடைபயணத்தில் அண்ணாமலை பேசும்போது, பல்வேறு ஆதாரமற்ற அவதூறுகளை அள்ளி வீசி வருகிறார் என கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

சென்னை,

தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

நடைபயணத்தில் அண்ணாமலை பேசும்போது, பல்வேறு ஆதாரமற்ற அவதூறுகளை அள்ளி வீசி வருகிறார். தமிழக அரசின் கடனை குஜராத் அரசோடு ஒப்பிடுகிறார். அண்ணாமலையின் முதுகு அவருக்கு தெரியாது. ஒன்றிய பா.ஜ.க. அரசுக்கு 9 ஆண்டுகளில் ரூபாய் 100 லட்சம் கோடி கடன் உயர்ந்திருக்கிறது என்பதை அண்ணாமலை அறிவாரா? தமிழகத்தில் கடன் யார் ஆட்சியில் எவ்வளவு அதிகரித்தது என்பதை அரைகுறை அண்ணாமலை ஆய்வு செய்யாமல் அவதூறான கருத்துகளை பரப்பலாமா? 2001 ஆம் ஆண்டு தி.மு.க. ஆட்சியிலிருந்து வெளியேறும்போது 34,540 கோடி ரூபாயாக இருந்த தமிழகத்தின் கடன் அளவு 2006 ஆம் ஆண்டு அ.தி.மு.க. ஆட்சிக்காலம் நிறைவடையும்போது 63,848 கோடி ரூபாயாக அதிகரித்திருந்தது. 5 ஆண்டு காலத்திற்குள் கடன் அளவு சுமார் 84 சதவிகிதம் அதிகரித்தது. இதை அண்ணாமலையால் மறுக்க முடியுமா? இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


Next Story