பாசன வாய்க்கால் தூர்வாரப்படுமா?
பனங்காட்டாங்குடியில், புதர் மண்டி கிடக்கும் பாசன வாய்க்கால் தூர்வாரப்படுமா? என விவசாயிகள் எதிர்பார்த்துள்ளனர்.
கூத்தாநல்லூர்:
பனங்காட்டாங்குடியில், புதர் மண்டி கிடக்கும் பாசன வாய்க்கால் தூர்வாரப்படுமா? என விவசாயிகள் எதிர்பார்த்துள்ளனர்.
பாசன வாய்க்கால்
கூத்தாநல்லூர் அருகே உள்ள பனங்காட்டாங்குடியில் அப்பகுதி விவசாயிகளின் பயன்பாட்டிற்காக, பாசன வாய்க்கால் ஏற்படுத்தப்பட்டது.
இதன்மூலம், வெண்ணாற்றில் இருந்து வரும் தண்ணீரை பனங்காட்டாங்குடி, குனுக்கடி மற்றும் அப்பகுதியில் உள்ள வயல்களுக்கு கொண்டு சென்று, விவசாயிகள் நெல், உளுந்து, பயறு மற்றும் பருத்தி பயிர்களை சாகுபடி செய்து வருகின்றனர்.
புதர் மண்டி கிடக்கிறது
இந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளாக பனங்காட்டாங்குடி பாசன வாய்க்கால் செல்லும் பாதையில் இடை இடையே ஆக்கிரமிப்புகள் ெசய்யப்பட்டுள்ளது. மேலும் வாய்க்காலில் கருவேல மரங்கள் மற்றும் அடர்ந்த செடிகள் வளர்ந்து புதர் மண்டி கிடக்கிறது. இவை, மட்டுமின்றி பாசன வாய்க்காலில் சாக்கடை மற்றும் கழிவுநீர் கலந்து சில இடங்களில் தேங்கி நிற்பதால் துர்நாற்றம் வீசுகிறது.
இவ்வாறு பல வகையில் பாசன வாய்க்காலின் நிலை உள்ளதால், கடந்த சில ஆண்டுகளாக ஆற்றில் இருந்து வரும் தண்ணீரை முறையாக வயல்களுக்கு கொண்டு செல்ல முடியாத அவலம் ஏற்பட்டுள்ளது.
தூர்வார வேண்டும்
இதனால் சாகுபடி செய்யப்படும் காலங்களில், ஆற்றில் தண்ணீர் வந்தும், வயல்களுக்கு போதிய அளவில் வருவதில்லை. தண்ணீர் இன்றி பயிர்கள் கருகும் பட்சத்தில் பம்புசெட் வைத்து தண்ணீர் பாய்ச்ச வேண்டிய நிலை ஏற்படுகிறது.
இதன் காரணமாக ஒவ்வொரு ஆண்டும், பல்வேறு சிரமங்கள் ஏற்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வாய்க்காலில் ஆக்கிரமிப்பு மற்றும் செடி, கொடி மற்றும் மரங்களை அகற்றி தூர்வார வேண்டும் என விவசாயிகள் எதிர்பார்த்துள்ளனர்.