சாய்ந்து கிடக்கும் சவுக்கு மரங்கள் அகற்றப்படுமா?
அரியமான், பிரப்பன்வலசை உள்ளிட்ட கடற்கரை பகுதிகளில் சவுக்கு மரங்கள் முறிந்து விழுந்து கிடக்கின்றன. இதனை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுற்றுலா பயணிகள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பனைக்குளம்,
சவுக்கு மரங்கள்
தமிழகத்திலேயே மிக நீண்ட கடற்கரை பகுதி ராமநாதபுரம் மாவட்ட கடற்கரை பகுதிதான். கடல் சீற்றம், கடல் அரிப்பு உள்ளிட்டவைகளால் கடலோர பகுதியை பாதுகாக்கும் வகையில் மாவட்ட வனத்துறை மூலம் தனுஷ்கோடி, தங்கச்சிமடம், பாம்பன், அரியமான், பிரப்பன்வலசை, சுந்தரமுடையான் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள கடற்கரைகளில் சவுக்கு மரங்கள் நடப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகின்றன. கடற்கரையில் வைக்கப்பட்டுள்ள சவுக்கு மரக்கன்றுகள் பல அடி உயரத்தில் வளர்ந்து தற்போது கடற்கரைக்கு அழகு சேர்க்கும் வகையிலும், பாதுகாப்பு அரணாகவும் விளங்கி வருகிறது.
உச்சிப்புளி அருகே உள்ள பிரப்பன்வலசை கடற்கரை பகுதியில் அழகு சேர்க்கும் வகையில் நீண்ட உயரத்தில் ஏராளமான சவுக்கு மரங்கள் வளர்ந்துள்ளன. இதில் ஏராளமான சவுக்கு மரங்கள் பட்டுப்போய் காணப்படுகின்றன. மேலும் அவை காற்றின் வேகத்தால் முறிந்து விழுந்தும் கிடக்கின்றன.
கோரிக்கை
இவ்வாறு விழுந்து கிடக்கும் ஏராளமான மரங்கள் அப்புறப்படுத்தப்படாமல் அங்கேயே கிடப்பதால் கடற்கரை பகுதி அலங்கோலமாக காட்சியளித்து வருகின்றன. இதுகுறித்து மாவட்ட வனத்துறையினர் உரிய நடவடிக்கை எடுத்து பிரப்பன்வலசை கடற்கரை பகுதியில் பட்டுப்போன நிலையில் முறிந்து விழுந்து கிடக்கும் சவுக்கு மரங்களை வெட்டி அப்புறப்படுத்த வேண்டும்.
மேலும் அந்த இடத்தில் புதிதாக சவுக்கு மரக்கன்றுகளை நடுவதற்கும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சுற்றுலா பயணிகளும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதேபோல் அரியமான், சுந்தரமுடையான் கடற்கரை பகுதியிலும் ஏராளமான சவுக்கு மரங்கள் முறிந்து விழுந்து கிடக்கின்றன. பல வருடங்களாக இந்த கடற்கரை பகுதிகளில் முறிந்து விழுந்து கிடக்கும் சவுக்கு மரங்கள் அகற்றப்படாமல் இருந்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.