தாழ்வாக செல்லும் மின்கம்பிகள் சரிசெய்யப்படுமா?


தாழ்வாக செல்லும் மின்கம்பிகள் சரிசெய்யப்படுமா?
x
தினத்தந்தி 24 April 2023 12:15 AM IST (Updated: 24 April 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

இடையாத்தங்குடி ஊராட்சியில் தாழ்வாக செல்லும் மின் கம்பிகள் சரிசெய்யப்படுமா என பொதுமக்கள் எதிர்பார்த்து உள்ளனர்.

நாகப்பட்டினம்

திட்டச்சேரி:

இடையாத்தங்குடி ஊராட்சியில் தாழ்வாக செல்லும் மின் கம்பிகள் சரிசெய்யப்படுமா என பொதுமக்கள் எதிர்பார்த்து உள்ளனர்.

தாழ்வாக செல்லும் மின்கம்பிகள்

திருமருகல் ஒன்றியம் இடையாத்தங்குடி ஊராட்சியில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் வசிக்கும் மக்களுக்கு திருமருகல் பகுதியில் இருந்து மின்வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. அவ்வாறு மின்வினியோகம் செய்ய மின்கம்பங்கள் அமைக்கப்பட்ட பகுதிகளில் கவுசி கரை வழியாக கீழத்தெரு வரை உள்ள மின்கம்பங்கள் சேதமடைந்து சாலையில் சாய்ந்து ஆபத்தான நிலையில் உள்ளன. இதனால் இந்த மின்கம்பங்களில் உள்ள மின்கம்பிகள் சாலையில் தாழ்வாக செல்கிறது. இதனால் சாலையில் செல்லும் பொதுமக்கள் விபத்து ஏற்படுமோ என்ற அச்சத்தில் சென்று வருகின்றனர்.

உயிர்சேதம் ஏற்படும் முன்...

மேலும் இந்த சாலை வழியாக விவசாயிகள் அறுவடை செய்த நெல் மூட்டைகள் மற்றும் வைக்கோலை டிராக்டர் உள்ளிட்ட வாகனங்களில் எடுத்து செல்ல முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என அப்பகுதி பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உயிர்சேதம் ஏற்படும் முன் உடன் நடவடிக்கை மேற்கொண்டு ஆபத்தான நிலையில் உள்ள மின்கம்பங்கள் மற்றும் தாழ்வாக செல்லும் மின்கம்பிகளை சீரமைக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story