கால்வாய் காணாமல் போனதாக புகார்; தவறான தகவல் அளித்த அதிகாரி மீது நடவடிக்கை


கால்வாய் காணாமல் போனதாக புகார்; தவறான தகவல் அளித்த அதிகாரி மீது நடவடிக்கை
x

கழிவுநீர் கால்வாய் காணாமல் போனதாக கூறப்பட்ட விவகாரத்தில் தவறான தகவல் அளிக்கப்பட்டதாவும், முறைகேடு ஏதும் நடைபெறவில்லை என்றும் கமிஷனர் அசோக்குமார் தெரிவித்தார்.

வேலூர்

கழிவுநீர் கால்வாய் காணாமல் போனதாக கூறப்பட்ட விவகாரத்தில் தவறான தகவல் அளிக்கப்பட்டதாவும், முறைகேடு ஏதும் நடைபெறவில்லை என்றும் கமிஷனர் அசோக்குமார் தெரிவித்தார்.

கழிவுநீர் கால்வாய் விவகாரம்

காட்பாடி அருகே கல்புதூர் ராஜீவ்காந்தி நகர் 3-வது மெயின் தெருவை சேர்ந்த பொதுமக்கள் தங்கள் பகுதியில் கழிவுநீர் கால்வாய் கட்டித்தர வேண்டும் என்று கோரிக்கை வைத்திருந்தனர். இதையடுத்து 2019-ம் ஆண்டு கால்வாய் கட்டுவதற்கு ஒப்பந்த புள்ளி கோரப்பட்டது. விரைவில் பணிகள் தொடங்கும் என்று எதிர்பார்த்திருந்தனர்.

நாட்கள் கடந்ததால் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் படி கால்வாய் குறித்த விவரங்களை அவர்கள் பெற்றனர். அதில் ரூ.9 லட்சத்து 90 ஆயிரம் மதிப்பில் கழிவுநீர் கால்வாய் கால்வாய் கட்டப்பட்டதாகவும், பணிகள் முடிவடைந்து விட்டதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனால் அப்பகுதி பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். கட்டப்பட்ட கால்வாய் காணாமல் போனதாக அவர்கள் அதிகாரிகள் மீது குற்றம் சாட்டினர். இது வேலூர் மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

கமிஷனர் திடீர் ஆய்வு

இது குறித்து வேலூர் மாநகராட்சி கமிஷனர் அசோக்குமார் அதிகாரிகளுடன் சம்பவ இடத்தில் நேற்று திடீர் ஆய்வு செய்தார். ராஜீவ்காந்தி நகர் பகுதியில் உள்ள தெருக்களில் ஏற்கனவே மேற்கொள்ளப்பட்டிருந்த கால்வாய்களை பார்வையிட்டார். கால்வாய் பணிகள் தொடங்கிய இடம், முடிவுற்ற இடம், சிறுபாலங்கள் போன்றவை அளவீடு செய்யப்பட்டது.

மேலும் திட்ட மதிப்பீடு உள்ளிட்ட விவரங்களை அவர் அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். கமிஷனர் அசோக்குமாரிடம் அப்பகுதி பொதுமக்கள் மின்வசதி, கால்வாய் வசதி வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். இதுகுறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்தார்.

நடவடிக்கை எடுக்கப்படும்

பின்னர் கமிஷனர் அசோக்குமார் கூறுகையில், ''இந்த பிரச்சினை தொடர்பாக ஆய்வு செய்யப்பட்டுள்ளது. ஆவணங்கள் அனைத்தும் சரிபார்க்கப்பட்டுள்ளது. 1-வது தெரு முதல் 3-வது தெரு வரை பணிகள் நடக்க திட்டமதிப்பீடு தயார் செய்யப்பட்டு பணிகள் நடந்தது.

ஆனால் 3-வது தெருவில் தண்ணீர் வெளியேற புவியியல் அமைப்பு படி சாத்திய கூறுகள் இல்லாமல் இருந்தது. எனவே அந்த தெருவில் பணி கைவிடப்பட்டது. அதைத்தொடர்ந்து அப்போதைய பொறியாளரிடம் அனுமதி பெற்று மற்ற தெருக்களில், இதற்குரிய பணம் செலவிடப்பட்டு, கூடுதலாக கால்வாய் மற்றும் 6 இடங்களில் சிறுபாலங்கள் கட்டப்பட்டுள்ளது. இதில் எந்த கையாடலோ, முறைகேடோ நடைபெறவில்லை.

இந்த விவகாரத்தில் ஆவணங்களை சரிபார்க்காமல், ஆய்வு செய்யாமல் தகவல் அளிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு தவறான தகவல் அளித்த அதிகாரியிடம் தகவல் அறியும் உரிமம் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். தற்போது அவரிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது'' என்றார்.


Next Story