கனரா வங்கி ஏ.டி.எம். எந்திரம் திறந்து கிடந்ததால் பரபரப்பு


கனரா வங்கி ஏ.டி.எம். எந்திரம் திறந்து கிடந்ததால் பரபரப்பு
x

திருச்சியில் கனரா வங்கி ஏ.டி.எம். எந்திரம் திறந்து கிடந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அதிர்ஷ்டவசமாக பல லட்சம் ரூபாய் தப்பியது.

திருச்சி


திருச்சியில் கனரா வங்கி ஏ.டி.எம். எந்திரம் திறந்து கிடந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அதிர்ஷ்டவசமாக பல லட்சம் ரூபாய் தப்பியது.

கனரா வங்கி ஏ.டி.எம். மையம்

திருச்சி கண்டோன்மெண்ட் வில்லியம்ஸ் சாலையில் சேவா சங்கம் பெண்கள் மேல்நிலைப்பள்ளி நுழைவுவாயில் அருகில் கனரா வங்கியின் ஏ.டி.எம். மையம் செயல்பட்டு வருகிறது. இந்த ஏ.டி.எம். மையத்திற்கு நேற்று முன்தினம் இரவு 10.30 மணிக்கு 2 வாலிபர்கள் சென்றனர்.

அவர்கள், உள்ளே சென்ற சிறிதுநேரத்தில் ஏ.டி.எம். மையத்தில் இருந்து அபாய மணி ஒலித்தது. இதனால் பயந்துபோன அந்த வாலிபர்கள் அங்கிருந்து வேகமாக வெளியேறி ஓட்டம் பிடித்தனர். இந்த நிலையில் பள்ளி அருகே அமைந்துள்ள கடைகளில் இருந்தவர்கள், ஏ.டி.எம். மையத்துக்கு சென்று பார்த்தனர்.

அபாய மணி ஒலித்தது

அப்போது, ஏ.டி.எம். எந்திரத்தின் கதவு திறந்து கிடந்ததைக்கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனே அவர்கள், 2 வாலிபர்கள் ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து பணத்தை திருட முயற்சித்ததாகவும், அபாய மணி ஒலித்ததால் அவா்கள் தப்பி சென்றுவிட்டதாகவும், ஏ.டி.எம். எந்திரத்தின் கதவு திறந்து கிடப்பதாகவும் மாநகர போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தனர்.

இதைத்தொடர்ந்து திருச்சி தெற்கு துணை போலீஸ் கமிஷனர் ஸ்ரீதேவி, உதவி போலீஸ் கமிஷனர் அஜய்தங்கம் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அவர்கள், வங்கி அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கவே, அவர்களும் அங்கு விரைந்து வந்தனர்.

ஊழியர்களின் அலட்சியம்

பின்னர், அங்கு பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். அதில், பணம் எடுக்க 2 வாலிபர்கள் வந்துள்ளனர். பின்னர் அவர்களில் ஒருவர் ஏ.டி.எம். கார்டை பயன்படுத்தி, பணத்தை எடுத்துள்ளார். அப்போது எந்திரத்தின் கீழே பணம் உள்ள பகுதியின் இரு அடுக்கு கதவு தானாக திறந்த காட்சி பதிவாகி இருந்தது.

மேலும் அவர்கள், தங்களது பணத்தை எடுத்துக்கொண்டு, தானாக திறந்த எந்திரத்தின் கதவுகளை மூட முயன்றபோது தான், அபாய மணி ஒலித்ததும், அதனால் அவர்கள் பயந்து அங்கிருந்து ஓட்டம் பிடித்ததும் தெரியவந்தது. அத்துடன், இந்த சம்பவத்துக்கு சில மணி நேரம் முன்பு ஏ.டி.எம். எந்திரத்தின் கதவை திறந்து வங்கி ஊழியர்கள் பணம் நிரப்பியதும், எந்திரத்தின் கதவுகளை சரியாக பூட்டாமல் சென்றதும் தெரியவந்தது. இதனால், ஊழியர்களின் அலட்சியம் காரணமாக ஏ.டி.எம். எந்திரத்தின் கதவு தானாக திறந்து கொண்டது கண்டுபிடிக்கப்பட்டது.

போலீசார் நிம்மதி

ஏ.டி.எம். எந்திரத்தில் கொள்ளை முயற்சி நடைபெறவில்லை என்பது உறுதியான பின்னரே, போலீசார் நிம்மதி பெருமூச்சு விட்டனர். ஒரு வேலை அபாய மணி ஒலிக்காமல் இருந்திருந்தால், அந்த எந்திரத்தில் இருந்த பல லட்ச ரூபாயை யாராவது கொள்ளையடித்து சென்றிருக்க வாய்ப்பு ஏற்பட்டு இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்த சம்பவம் குறித்து கண்டோன்மெண்ட் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் காரணமாக அந்த பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.


Next Story