ஆரம்ப சுகாதார நிலையத்தில் 108 ஆம்புலன்ஸ் சேவை ரத்து


ஆரம்ப சுகாதார நிலையத்தில் 108 ஆம்புலன்ஸ் சேவை ரத்து
x

தோகைமலை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் இருந்த 108 ஆம்புலன்ஸ் சேவை நிறுத்தப்பட்டுள்ளதால் உயிரிழப்புகள் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக மக்கள் குற்றச்சாட்டு தெரிவிக்கின்றனர்.

கரூர்

ஆரம்ப சுகாதார நிலையம்

கரூர் மாவட்டம், தோகைமலையில் 30 படுக்கை வசதிகளுடன் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையம் செயல்பட்டு வருகிறது. இதன் மூலம் தோகைமலை, கழுகூர், சின்னயம்பாளையம், நாகனூர், கீழவெளியூர், பாதிரிப்பட்டி, பில்லூர், பொருந்தலூர், புத்தூர் ஆகிய ஊராட்சிகளை சேர்ந்த சுமார் 150 குக்கிராம மக்கள் பயனடைந்து வருகின்றனர்.

இந்த சுகாதார நிலையத்தில் 8 டாக்டர்கள் பணியாற்ற வேண்டும். ஆனால் தற்போது 4 டாக்டர்கள் மட்டுமே இருந்து வருகின்றனர். இதனால் நோயாளிகளுக்கு உரிய நேரத்தில் சிகிச்சை அளிப்பதில் தாமதம் ஏற்பட்டு வருகிறது. மேலும் பொதுமக்களின் நலன் கருதி இந்த சுகாதார நிலையத்திற்கு தமிழக அரசால் கடந்த சுமார் 4 ஆண்டுகளுக்கு முன்பு 108 ஆம்புலன்ஸ் சேவை தொடங்கப்பட்டது.

108 ஆம்புலன்ஸ் சேவை ரத்து

இதனால் சுற்று வட்டாரத்தை சேர்ந்த கர்ப்பிணிகள், விபத்தில் காயம் அடைந்தவர்களை மருத்துவமனைக்கு கொண்டுவர பெரிதும் உதவியாக இருந்து வந்தது. இந்த நிலையில் இந்த 108 ஆம்புலன்ஸ் வாகனம் நிறுத்தப்பட்டு இருந்த இடத்தின் அருகே இருந்த பழைய கட்டிடம் இடிக்கப்பட்டது. இதையடுத்து அந்த கட்டிட கழிவுகள் அதே இடத்தில் கொட்டப்பட்டு உள்ளதால் 108 ஆம்புலன்ஸ் வாகனத்தை நிறுத்த அங்கு போதி இடம் இல்லாமல் போனது.

பின்னர் அப்பகுதியில் உள்ள ஒரு தனியார் இடத்தில் கடந்த 10 நாட்களாக 108 ஆம்புலஸ் நிறுத்தப்பட்டு சேவை நடைபெற்று வந்தது. இந்த நிலையில் வானம் நிறுத்த போதிய இடவசதி இல்லை என தேகைமலை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் இயக்கப்பட்டு வந்த வாகனம் தற்போது மையம்பட்டி அரசு மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்ஸ் கொண்டு செல்லப்பட்டுள்ளது. இதனால் தோகைமலை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு ஆம்புல்ஸ் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. தோகைமலை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர்.

சமூக வலைதளங்களில் பரவுகிறது

இப்பகுதிகள் உள்ள சாலைகளில் நடக்கும் விபத்துகளில் சிக்கியவர்களை விரைவில் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வேண்டும் என்றால் 108 ஆம்புலன்ஸ் சேவை என்பது மிகவும் அவசியமான ஒன்றாக உள்ளது. இந்த நிலையில் இப்பகுதியில் 108 ஆம்புலன்ஸ் சேவை ரத்து செய்யப்பட்டு உள்ளதால் இப்பகுதியில் நடக்கும் விபத்துகளில் சிக்குபவர்களை மீட்டு சிகிச்சைக்காக தோகைமலை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு வர வேண்டும் என்றால் குளித்தலை, முசிறி, மணப்பாறை, மைலம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள அரசு மருத்துவமனைகளில் இருந்து 108 ஆம்புலன்ஸ் வர வேண்டிய நிலை உள்ளது.

இதனால் காலதாமதம் ஏற்பட்டு விபத்தில் சிக்கியவர்கள் உயிரிழக்கும் அபாயம் அதிகமாக உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து தோகைமலை பகுதி மக்களின் நலன் கருதி தோகைமலை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மீண்டும் 108 ஆம்புலன்ஸ் சேவையை தொடங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். தோகைமலை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கான 108 ஆம்புலன்ஸ் சேவை ரத்து செய்யப்பட்டதற்கான ஆணை தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருவது குறிப்பிடத்தக்கது.


Next Story