ஜாமீன், முன்ஜாமீனை ரத்து செய்ய தேவையில்லை
கரூரில் வருமான வரித்துறை அதிகாரிகளை தாக்கிய வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு ஜாமீன், முன் ஜாமீனை ரத்து செய்ய தேவையில்லை என மதுரை ஐகோர்ட்டில் வக்கீல்கள் வாதாடினர்.
கரூரில் வருமான வரித்துறை அதிகாரிகளை தாக்கிய வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு ஜாமீன், முன் ஜாமீனை ரத்து செய்ய தேவையில்லை என மதுரை ஐகோர்ட்டில் வக்கீல்கள் வாதாடினர்.
அதிகாரிகள் மீது தாக்குதல்
வருமான வரித்துறை உதவி இயக்குனர் யோக பிரியங்கா மற்றும் அதிகாரிகள், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-
கரூரில் சிலர் வருமானவரி முறைகேடு செய்ததாக புகார்கள் வந்தன. அதன்பேரில் அவர்களின் வீடுகளில் கடந்த மே மாதம் 25-ந்தேதி சோதனை நடத்தினோம். அங்கு கூடிய கூட்டத்தினர் எங்களை தாக்கினர்.
இந்த சம்பவம் குறித்து போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் 19 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து சிலரை கைது செய்தனர். 19 பேருக்கு ஜாமீன் மற்றும் முன்ஜாமீன் வழங்கி கரூர் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டு உத்தரவிட்டது. அதை ரத்து செய்து உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தனர்.
ரத்து செய்ய தேவையில்லை
இந்த வழக்கு நீதிபதி இளங்கோவன் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது தமிழக அரசு கூடுதல் வக்கீல் நம்பி செல்வன் ஆஜராகி, அதிகாரிகள் தாக்கப்பட்டதாக போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அதன் பேரில் 4 பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் சிலர் கைதாகி சட்டப்படி ஜாமீனில் விடுவிக்கப்பட்டு உள்ளனர். விசாரணை நடந்து வருகிறது என்றார்.
குற்றம் சாட்டப்பட்டவர்கள் தரப்பில் மூத்த வக்கீல் என்.ஆர்.இளங்கோ ஆஜராகி, சம்பந்தப்பட்டவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 7 ஆண்டுக்கு குறைவான தண்டனை விதிக்கப்படும் பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்ததால் சுப்ரீம் கோர்ட்டு வழிகாட்டுதல்களின்படிதான் அவர்களுக்கு கீழ் கோர்ட்டு ஜாமீன், முன் ஜாமீன் அளித்து உள்ளது. எனவே அதை ரத்து செய்ய தேவையில்லை என்றார்.
ஒத்திவைப்பு
அனைத்து தரப்பு வாதங்களையும் பதிவு செய்து கொண்ட நீதிபதி, இந்த வழக்கின் தீர்ப்பை ஒத்தி வைத்து உத்தரவிட்டார்.