விதிகளை மீறி உரம் விற்பனையில் ஈடுபட்டால் உரிமம் ரத்து
தர்மபுரி மாவட்டத்தில் விதிகளை மீறி உரம் விற்பனையில் ஈடுபட்டால் உரிமம் ரத்து செய்யப்படும் என்று வேளாண் இணை இயக்குனர் எச்சரிக்கை விடுத்தார்.
தர்மபுரி மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் முகமது அஸ்லம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
தர்மபுரி மாவட்டத்தில் தற்போது கார் மற்றும் காரீப் சாகுபடி பருவத்தில் 51 ஆயிரம் ஹெக்டர் பரப்பில் வேளாண் பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ளன. இந்த பருவத்திற்கு தேவையான யூரியா, டி.ஏ.பி., பொட்டாஷ், காம்ப்ளக்ஸ் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகள் மற்றும் தனியார் உர விற்பனை நிலையங்களில் இருப்பு வைக்கப்பட்டு வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. அனைத்து உர விற்பனை நிலையங்களிலும் அரசு நிர்ணயித்த விலைக்கு மிகாமல் உரங்களை விற்பனை செய்ய வேண்டும். விவசாயிகளின் விருப்பத்திற்கு மாறாக மானிய விலை உரங்களுடன் இணை இடுபொருட்களை வாங்க கட்டாயப்படுத்தக்கூடாது. உரம் விற்பனையில் விதிமீறல்களில் ஈடுபட்டால் அந்த நிலையங்களின் உரிமத்தை நிரந்தரமாக ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். உரம் தொடர்பான புகார்களை அந்தந்த வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலகத்தை அணுகி விவசாயிகள் தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.