ஆய்வுக்கு காண்பிக்கப்படாத நாட்டு படகுகளின் பதிவுசான்று ரத்து


ஆய்வுக்கு காண்பிக்கப்படாத நாட்டு படகுகளின் பதிவுசான்று ரத்து
x
தினத்தந்தி 16 May 2023 12:15 AM IST (Updated: 16 May 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

திருவாரூர்மாவட்டத்தில் வருகிற 20-ந் தேதி நாட்டு படகுகள் ஆய்வு நடக்கிறது. ஆய்வில் காண்பிக்கப்படாத படகுகளுக்கு பதிவு சான்று ரத்து செய்யப்படும் என்று கலெக்டர் சாருஸ்ரீ தெரிவித்துள்ளார்.

திருவாரூர்


திருவாரூர்மாவட்டத்தில் வருகிற 20-ந் தேதி நாட்டு படகுகள் ஆய்வு நடக்கிறது. ஆய்வில் காண்பிக்கப்படாத படகுகளுக்கு பதிவு சான்று ரத்து செய்யப்படும் என்று கலெக்டர் சாருஸ்ரீ தெரிவித்துள்ளார்.

நாட்டுப்படகுகள்

திருவாரூர் மாவட்ட கலெக்டர் சாருஸ்ரீ விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- தமிழ்நாடு கடல் மீன்பிடி ஒழுங்குபடுத்தும் சட்டம் 1983-ன் படி திருவாரூர் மாவட்டத்தில் அனைத்து பதிவு செய்யப்பட்ட மற்றும் பதிவு செய்யப்படாத நாட்டுப்படகுகள் வருகிற 20-ந் தேதி(சனிக்கிழமை) நேரடியாக ஆய்வு செய்யப்பட உள்ளது. ஆய்வு நாளன்று படகினை தங்களது பதிவு செய்யப்பட்ட தங்கு தளத்தில் நிறுத்திட கேட்டுக்கொள்ளப்படுகிறது.

ஆய்வு செய்யும் நாளில் படகு உரிமையாளர்கள் படகுகளின் பதிவு சான்று, மீன்பிடி உரிமம், படகு காப்பீடு உரிமம் மற்றும் வரிவிலக்களிக்கப்பட்ட டீசல் எரி எண்ணெய் பாஸ் புத்தகம் ஆகியவைகளின் அசல் ஆவணங்களுடன் அவற்றின் புகைப்பட நகல்கள் ஆகியவற்றை ஆய்வு குழுவினரிடம் காண்பிக்க வேண்டும்.

பதிவு சான்று ரத்து

மேலும், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை மூலம் வழங்கப்பட்டுள்ள தொலைத்தொடர்பு கருவிகள் மற்றும் கடற்பயண பாதுகாப்பு கருவிகள் உடன் படகில் தயார் நிலையில் வைத்திட கேட்டுக்கொள்ளப்படுகிறது. மீன்பிடி கலன்களில் பதிவெண் தெளிவாக தெரியும் வண்ணம் எழுதி இருத்தல் வேண்டும். மேலும் ஆய்வில் காண்பிக்கப்படாத நாட்டுப்படகுகளுக்கு விற்பனை வரி விலக்களிக்கப்பட்ட டீசல் எரி எண்ணெய் நிறுத்தம் செய்யப்படும்.

மேலும் அந்த படகுகள் இயக்கத்தில் இல்லாததாகக் கருதி அப்படகுகளின் பதிவு சான்றை உரிய விசாரணைக்குப்பின் ரத்து செய்யப்படும். ஆய்வு செய்யப்படவுள்ள நாளில் எந்திரம் பொருத்தப்பட்ட நாட்டுப்படகுகளில் உள், வெளிப்பொருத்தும் எந்திரங்கள் கண்டிப்பாக படகில் பொருத்தி இருக்க வேண்டும். ஆய்வு நாளன்று படகினை ஆய்வுக்கு உட்படுத்தாமல் பின்னொரு நாளில் படகினை ஆய்வு செய்யக்கோரும் படகு உரிமையாளரின் கோரிக்கை ஏற்கப்படமாட்டாது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story