விளையாட்டு போட்டிகளில் 30 பதக்கங்களை வென்ற அரசு பள்ளி மாணவி புற்றுநோயால் பாதிப்பு-முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உதவி செய்ய பெற்றோர் வேண்டுகோள்
கிருஷ்ணகிரி:
விளையாட்டு போட்டிகளில் 30 பதக்கங்களை வென்ற அரசு பள்ளி மாணவி புற்றுநோயால் அவதிப்பட்டு வருகிறார். அவருடைய சிகிச்சைக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உதவிக்கரம் நீட்ட பெற்றோர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
சாதனை மாணவி
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் தாலுகா சூலாமலை ஊராட்சிக்கு உட்பட்ட மேல்கொட்டாயை சேர்ந்தவர்கள் சகாதேவன்-லட்சுமி தம்பதி. இவர்களுக்கு 17 வயதில் மஞ்சு என்ற மகனும், 14 வயதில் சத்யா என்ற மகளும் உள்ளனர்.
இவர்களில் சத்யா சூலாமலை அரசு உயர்நிலைப்பள்ளியில் படித்து வந்தார். மேலும் பள்ளியில் 5-ம் வகுப்பு முதல் பள்ளி அளவிலான தடகள போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்றார். மாநில அளவில் நடந்த 42 மாரத்தான் போட்டிகளிலும் பங்கேற்றார்.
இதை தவிர கடந்த 2018-ம் ஆண்டு முதல்-அமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டியில் 5 ஆயிரம் மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் கலந்து கொண்டு மாநில அளவில் 7-வது இடம் பிடித்தார். மேலும் மாவட்ட அளவிலான போட்டிகளில் வென்று, 30-க்கும் மேற்பட்ட பதக்கங்களை பெற்றுள்ளார்.
புற்றுநோய்
கடந்த 2021-ம் ஆண்டு ஜூலை மாதம் 8-ம் வகுப்பு படித்து வந்த மாணவி சத்யாவிற்கு முதுகு பகுதியில் திடீரென்று வலி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவர் கிருஷ்ணகிரி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சேலம் தனியார் மருத்துவமனையில் எம்.ஆர்.ஐ., ஸ்கேன் செய்ய பரிந்துரை செய்தனர்.
அதில், சத்யாவுக்கு முதுகு தண்டுவடத்தில் புற்றுநோய் கட்டி இருப்பது தெரியவந்தது. இதனால் தலையில் விழுந்த பேரிடியை எண்ணி துடித்த மாணவியின் பெற்றோர், உடனடியாக சென்னை அடையாறு புற்றுநோய் மருத்துவமனையில் அவரை சேர்த்தனர்.
அங்கு அறுவை சிகிச்சை மூலம் சத்யாவின் புற்றுநோய் கட்டி அகற்றப்பட்டது. தொடர்ந்து 2½ மாதங்கள் சிகிச்சைக்கு பின் அவர் வீடு திரும்பினார்.
படுத்த படுக்கை
இதனிடையே மாணவி சத்யா நடக்க சிரமப்பட்டார். அவருக்கு அதே ஊரை சேர்ந்த சமூக ஆர்வலர்கள், விளையாட்டு பயிற்சியாளர்கள் நடைபயிற்சி அளித்து வந்தனர். இந்தநிலையில் தான் கடந்த ஜூலை மாதம் முதல் சத்யாவுக்கு மீண்டும் முதுகுவலி ஏற்பட்டது. சென்னை அடையாறு புற்றுநோய் மருத்துவமனையில் பரிசோதித்த போது, முதுகு பகுதியில் மீண்டும் கட்டி வளர்ந்திருப்பது தெரிந்தது.
இதனால் ஓடி, ஆடி விளையாட வேண்டிய வயதில் மாணவி சத்யா படுத்த படுக்கையானார். மேலும் பல்வேறு ஓட்டங்களில் கலந்து கொண்ட கால்கள் தற்போது வீட்டிலேயே முடங்கி கிடக்கிறது. இது பெற்றோர் மட்டுமல்லாது, உறவினர்களையும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.
கண்ணீர் மல்க கோரிக்கை
தற்போது சத்யாவுக்கு ஏற்பட்டுள்ள புற்றுநோய், 3-வது நிலையை எட்டியதால் மருத்துவ தேவைக்கு ரூ.30 லட்சம் செலவாகும் நிலை ஏற்பட்டுள்ளது. இதில் சத்யா தரப்பில் ரூ.5 லட்சம் கட்டினால், ரூ.20 லட்சத்தை காப்பீட்டு திட்டத்தில் பெற முடியும் என்று டாக்டர்கள் கூறியுள்ளனர்.
ஆனால் வறுமையின் பிடியில் வாடும் சத்யாவின் பெற்றோரால் தங்களது நிலத்தை அடகு வைத்து ரூ.1 லட்சம் மட்டுமே பெற முடிந்தது. இதனால் அவர்கள் தங்களது மகள் மருத்துவ சிகிச்சை மற்றும் செலவுக்கு தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உதவிக்கரம் நீட்ட வேண்டும் என்று கண்ணீருடன் கோரிக்கை விடுத்துள்ளனர்.