நேர்முகத்தேர்வுக்கு வரும் மாற்றுதிறனாளிகள் சான்றிதழுடன் வரவேண்டும்
நேர்முகத்தேர்வுக்கு வரும் மாற்றுதிறனாளிகள் சான்றிதழுடன் வரவேண்டும் என்று அதிகாரி தெரிவித்துள்ளார்.
திருப்பத்தூர் மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் சி.பெ.முருகேசன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளரின் கட்டுப்பாட்டில் திருப்பத்தூர் மாவட்டத்தில் செயல்பட்டுவரும் பல்வேறு வகையான கூட்டுறவுச் சங்கங்களில் காலியாக உள்ள விற்பனையாளர்கள் பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்புவதற்கு வருகிற 14-ந் தேதி முதல் திருப்பத்தூரில் நேர்முகத்தேர்வு நடைபெறுகிறது. தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள் நிர்ணயிக்கப்பட்ட படிவத்தில் அரசு உதவி மருத்துவர் நிலைக்கு குறையாத மருத்துவரிடம் உடற்தகுதிச் சான்று பெற்று சம்மந்தப்பட்ட கூட்டுறவு நிறுவனத்தில் பணியில் சேரும்போது சமர்ப்பிக்க வேண்டும். மாற்றுத்திறனாளிகள் தங்களுடைய உடற்குறைபாடு, அவர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட பதவிகளுக்கான பணியினைச் செய்வதற்கு தடையாக இருக்காது என்பது குறித்து மருத்துவ குழுவிடமிருந்து பெறப்பெட்ட சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும் என ஏற்கனவே தெரிவிக்கப்பட்டிருந்தது.
தற்போது திருத்தப்பட்ட வழிகாட்டு நெறிமுறையில் மேற்படி பதவிகளுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள் நேர்முகத் தேர்வின்போது மாற்றுத்திறனாளிகள் தங்களது உரிமை கோரலுக்கு ஆதாரமாக தமிழக அரசின் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலரால் வழங்கப்பட்ட உதவிகள், பதிவு புத்தகம் அல்லது தகுதி வாய்ந்த அரசு மருத்துவரால் வழங்கப்பட்ட மாற்றுத்திறனாளி சான்றிதழ் அல்லது தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை இவற்றில் ஏதேனும் ஒன்றை சமர்ப்பிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.